பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி தற்போது புதிய பருவத்துடன் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. இதன் தொகுப்பாளராக இந்த சீசனில் நடிகர் விஜய் சேதுபதி பணியாற்றி வருகிறார். பிக்பாஸ் ஹவுஸில் அவர் கொண்டுவந்த மாற்றங்கள், அவரது அமைதியான நடத்தையும், மனிதநேய பூர்வமான உரைகளும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்படி இருக்க எபிசோடில் நடந்த நிகழ்வில், விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் ஒரு சிந்திக்க வைக்கும் கேள்வியை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், “இந்த வீட்டில் யாராவது பணத்திற்காக மட்டும் இருக்கிறார்களா? ஒரே நோக்கம் — ‘இந்த நாள் கடந்து போகட்டும், பணம் வந்துவிடும்’ என்ற எண்ணத்தோடு விளையாடுபவர்கள் யார் என்று சொல்லுங்க” என்றார். இந்த கேள்வி போட்டியாளர்களை சில வினாடிகள் அமைதியாக்கியது. பின்னர் பலர் அரோரா என்பவரின் பெயரை குறிப்பிட்டனர். சிலர் “அவர் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என நினைத்து விளையாடுகிறார்” என்று கூறினர். இதையடுத்து விஜய் சேதுபதி மெல்ல சிரித்தபடி, “கடன் இருக்கிறது என்று சொல்வது ஒரு குற்றமல்ல. நான் கூட அதிலிருந்து தப்பவில்லை. நான் ஆயிரத்தில் சம்பாதித்தபோது ஆயிரத்தில் கடன் இருந்தது. லட்சத்தில் சம்பாதித்த போது அதற்கேற்ப கடன் இருந்தது. இன்று கோடிகளில் சம்பாதிக்கிறேன், ஆனாலும் அந்த பிரச்சனை இன்னும் என்னுடன் இருக்கிறது.
நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், வாழ்க்கையில் ஒரு பொறுப்பு என்றால் அது எப்போதும் இருக்கும். அது குடும்பம், உறவுகள் அல்லது கடன் ஆகலாம். அதை ஓடிப் போய் மறைக்க முடியாது. அதைத் தாங்கிக்கொண்டு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நான் அதையே கற்றுக்கொண்டேன்” என்றார். அவரது இந்தப் பேச்சு வீட்டில் இருந்த போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் ஒரே நேரத்தில் நெகிழ்ச்சியடையச் செய்தது. பலரும் விஜய் சேதுபதி மனம் திறந்த உரை ஒரு “மாஸ்டர் கிளாஸ் ஆஃப் லைஃப்” என்று பாராட்டினர். பின்னர் விஜய் சேதுபதி மேலும் பேசுகையில், “நீங்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பது பணத்திற்காக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அந்த பணம் உங்கள் மதிப்பை குறைக்கக் கூடாது. நீங்கள் எதற்காக வந்தீர்கள், யார் என்பதை மறந்துவிடாதீர்கள். பணம் நம்மை இயக்கக் கூடாது, நாம் பணத்தை இயக்கணும்” என்றார்.
இதையும் படிங்க: நான் செய்தது தவறுதான்.. 'sorry' கேட்ட நிரூபர்..! மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என கொந்தளித்த கெளரி கிஷன்..!

அவர் கூறிய இந்த வரிகள் அங்கே இருந்த அனைவருக்கும் ஒரு சில நொடிகள் சிந்தனைக்குரிய அமைதியை ஏற்படுத்தியது. அரோராவும் பின்னர் பேசுகையில், “நான் பணத்திற்காக வந்தது உண்மைதான், ஏனெனில் எனக்கு கடன்கள் இருக்கின்றன. ஆனால் அதே சமயம், இந்த நிகழ்ச்சியில் என்னை நிரூபிக்கவும் வந்துள்ளேன்” என்று சொன்னார். விஜய் சேதுபதி அதற்குப் பதிலாக ஊக்கமளித்து, “அது தான் சரியான அணுகுமுறை. நீ உன்னோட உண்மையை ஏற்றுக்கொண்டதால்தான் நீ வலிமையானவனாக மாறுவாய்” என்று கூறினார். இவ்விதம், பிக் பாஸ் வீட்டில் நடந்த சாதாரண உரையாடல், மனித வாழ்க்கையின் நிஜங்கள் பற்றி பேசும் தளமாக மாறியது. அடுத்ததாக, விஜய் சேதுபதி தன் வாழ்க்கையைப் பற்றி சற்றே விரிவாகப் பேசினார்.
அதில் “நான் சினிமாவுக்கு வந்த போது பத்தாயிரம் சம்பாதிப்பதே கனவு. அது நிஜமானபோது, ஒரு குடும்பம், ஒரு குழந்தை, ஒரு வீடு, ஒரு காருக்கான ஆசைகள் எல்லாம் வந்தது. அதோடு கடன்களும் வந்தன. ஆனால் அதுதான் வாழ்க்கை. நம்மைச் சவால்கள் தான் வளர்க்கும். கடன்களைச் சமாளிக்க கற்றுக்கொண்டேன். அதற்காக யாரிடமும் குறை சொல்லவில்லை. பணம் ஒரு கருவி தான், இலக்கு அல்ல.
உன் மன அமைதி போய்விட்டால், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது பயனில்லை. நீ உன் கடனை அடைத்தால் அது வெற்றி அல்ல, நீ உன் மனதை அமைதியாக வைத்தால் அது தான் வெற்றி” என்றார். இந்தக் கருத்துகள் வீட்டில் இருந்த போட்டியாளர்களுக்கு உணர்வை ஏற்படுத்தியதோடு, பார்வையாளர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சி பொதுவாக சண்டைகள், கருத்து மோதல்கள் மூலம் பேசப்படும்.

ஆனால் இந்த வாரம், விஜய் சேதுபதியின் மனிதநேய உரையால் நிகழ்ச்சி சமூகச் செய்தியுடன் கூடிய நிகழ்வாக மாறியது என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர். அவரது இந்த மனம் தொடும் உரை குறித்து பல பிரபலங்களும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், பிக் பாஸ் வீட்டில் நடந்த இந்த ஒரு உரையாடல் மட்டும் அல்லாமல், அது வாழ்க்கை பற்றிய பாடமாக மாறி விட்டது. விஜய் சேதுபதி தனது மனிதநேயம், நிதானம், அனுபவம் மூலமாக மீண்டும் ஒருமுறை நிரூபித்தார்.
இதையும் படிங்க: இந்த ஒரு மருந்து தான்.. நான் ஒல்லியாக மாற காரணமே..! வதந்திகள் மத்தியில் உண்மையை உடைத்த நடிகை தமன்னா..!