சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம், வெளியான நாள் முதல் வசூல் ரீதியாக நல்ல தொடக்கத்தைப் பெற்றிருந்தாலும், படம் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை எட்டவில்லை என்ற கருத்துகள் தற்போது சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. சமூக கருத்துக்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது புதிய சர்ச்சை ஒன்றின் மையமாக மாறியுள்ளது.
‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகும் முன்பே, விஜய் நடிப்பில் உருவாகி வந்த ‘ஜனநாயகன்’ படத்துடன் ஒப்பிட்டு விமர்சனங்களை சந்திக்கத் தொடங்கியது. குறிப்பாக, ‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாகவே ‘பராசக்தி’ களமிறக்கப்படுகிறது என விஜய் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால், படம் ரிலீசுக்கு முன்பே சமூக ஊடகங்களில் கருத்து மோதல்கள், விமர்சனங்கள், ட்ரோல்கள் என பரபரப்பு அதிகரித்தது.
எனினும், ரிலீஸ் நேரத்தில் எதிர்பாராத திருப்பமாக ‘ஜனநாயகன்’ படம் சென்சார் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளில் சிக்கி, இதுவரை திரையரங்குகளுக்கு வரவில்லை. இதன் காரணமாக, ‘பராசக்தி’ திரைப்படம் திட்டமிட்டபடியே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ஆரம்ப நாட்களில் நல்ல வசூலை ஈட்டியது. பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளும், ரசிகர்களின் ஆதரவும் கிடைத்ததாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதையும் படிங்க: இது ஆக்ஷன் படமா.. இல்ல ஆபாச படமா..! யாஷ் நடித்துள்ள ’டாக்சிக்’ பட டீசருக்கு எதிராக புகார்..!

ஆனால், முதல் வாரத்தைத் தாண்டிய பிறகு, படத்தின் வசூல் வேகம் சற்று குறைந்துள்ளதாகவும், எதிர்பார்த்த அளவிலான பிளாக்பஸ்டர் வெற்றியை ‘பராசக்தி’ பெறவில்லை என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கு காரணமாக, படத்தின் திரைக்கதை, மெதுவான கதை சொல்லல், அரசியல் மற்றும் சமூக கருத்துக்களின் கனத்த தன்மை போன்றவை சில ரசிகர்களுக்கு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பொதுவான குடும்ப ரசிகர்களை படம் முழுமையாக ஈர்க்கவில்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இந்த சூழலில், ‘பராசக்தி’ இயக்குநர் சுதா கொங்கரா அண்மையில் அளித்த ஒரு பேட்டி தற்போது சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த அந்த பேட்டியில், படத்தின் ரிலீஸ், மார்க்கெட்டிங் மற்றும் சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து அவர் பேசிய கருத்துகள், விஜய் ரசிகர்களை மறைமுகமாக சாடும் வகையில் இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.
அந்த பேட்டியில் சுதா கொங்கரா பேசுகையில், “ஒரு படத்தை அது சென்றடைய வேண்டிய இடத்திற்கு எடுத்துச் செல்ல, முன்கூட்டியே ஒரு குழுவாக மிகப்பெரிய வேலை செய்ய வேண்டியுள்ளது. இந்த மார்க்கெட்டிங் யுகத்தில், படம் நல்லதாக இருந்தாலே போதும் என்று நினைக்க முடியாது. படக்குழுவாக, திட்டமிட்ட மார்க்கெட்டிங் மூலம் தான் அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒரு படத்தை ரிலீஸ் செய்வது மட்டும் போதுமானதாக இருக்காது. பொங்கல் வார இறுதியில் படம் பெரும்பான்மையான ரசிகர்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பராசக்தி படம் குறித்து பதிவிடப்பட்ட சில கருத்துகளையும் அவர் மேற்கோள் காட்டிப் பேசினார். அதில், ஒரு நெட்டிசன் பதிவிட்டிருந்த கருத்தை அவர் வாசித்தார். அந்த பதிவில், “சிபிஎஃப்சி-கிட்ட வாங்குறது பெருசு இல்லை. அண்ணா ஃபேன்ஸ்-கிட்ட சாரி கேட்டு, மன்னிப்பு சர்டிபிகேட் வாங்கு. இன்னும் ஒரு வாரம் இருக்கு. அவங்க மன்னிச்சு விட்டா பராசக்தி படம் ஓடும்” என்று பதிவிடப்பட்டிருந்தது.
இந்த கருத்தை மேற்கோள் காட்டி பேசிய சுதா கொங்கரா, “படம் வெளியாகாத நடிகரின் ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து பல்வேறு வகையான கருத்துகள் வருகின்றன. அவரின் ரசிகர்கள் தான் இதைச் செய்கிறார்கள். இதுதான் நாங்கள் எதிர்த்து போராடும் ரவுடித்தனம் மற்றும் குண்டர்தனம்” என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சு, விஜய் ரசிகர்களை ‘ரவுடிகள்’ என மறைமுகமாக குறிப்பிட்டதாக சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேட்டி வெளியான உடனே, விஜய் ரசிகர்கள் பலரும் சுதா கொங்கராவின் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில், சுதா கொங்கராவுக்கு ஆதரவாகவும் சில தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். “பெண்கள் இயக்குநர்கள் எதிர்கொள்ளும் சமூக ஊடக தாக்குதல்கள் குறித்து அவர் பேசுகிறார்”, “ட்ரோலிங் மற்றும் அச்சுறுத்தல் கலாச்சாரத்தை எதிர்த்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்” என சிலர் விளக்கம் அளித்து வருகின்றனர். சினிமாவில் கருத்துச் சுதந்திரம் மற்றும் ரசிகர் கலாச்சாரம் குறித்த விவாதங்கள், இந்த விவகாரத்தின் மூலம் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், ‘பராசக்தி’ திரைப்படம் தொடர்பான இந்த சர்ச்சை, படத்தின் வசூல் மற்றும் அதன் எதிர்கால பயணத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒருபுறம் படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் இயக்குநரின் பேட்டி காரணமாக உருவான இந்த சர்ச்சை, படத்தின் மீதான கவனத்தை வேறு திசைக்கு திருப்பியுள்ளது. வரும் நாட்களில், சுதா கொங்கரா அல்லது படக்குழு தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படுமா, அல்லது இந்த விவகாரம் மேலும் தீவிரமாவதா என்பதைக் காலமே தீர்மானிக்க வேண்டும்.
இதையும் படிங்க: கவர்ச்சி என்றால் இப்படி இருக்கணும்..! சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார் லேட்டஸ்ட் போட்டோஸ்..!