பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயின் கணவரும், பிரபல பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன், தனது புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களை அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி, கடந்த 10ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு, அவரது பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவை வணிக மற்றும் தனிப்பட்ட லாபத்திற்காக அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உத்தரவு கோருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு முன்னர், அவரது தந்தை அமிதாப் பச்சனும் இதேபோன்ற பிரச்சினைக்காக 2022இல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார், அங்கு அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: டெல்லி ஐகோர்ட் படியேறிய நடிகர் அபிஷேக் பச்சன்.. காரணம் இதுதான்..!!
அபிஷேக் பச்சன் தனது மனுவில், ஆன்லைன் தளங்களில் அவரது புகைப்படங்கள் மற்றும் அடையாளங்கள் மூலம் மோசடி விளம்பரங்கள் மற்றும் லாட்டரி மோசடிகள் நடைபெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதுடன், பொதுமக்களையும் ஏமாற்றுவதாக அவர் வாதிட்டார். இதனைத் தடுக்க, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வணிக லாபத்திற்காக அபிஷேக் பச்சனின் பெயர், ஏஐ புகைப்படங்கள் மற்றும் குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. முன்னதாக இதேபோல், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி நடிகை ஐஸ்வர்யா ராய் தொடந்த வழக்கிலும் இதே தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாப்பது மற்றும் அவர்களின் பெயர், புகைப்படங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது குறித்து இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், இது இந்தியாவில் பிரபலங்களின் உரிமைகள் தொடர்பான சட்ட விவாதங்களுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் முடிவு, எதிர்காலத்தில் இதேபோன்ற சம்பவங்களுக்கு முன்னுதாரணமாக அமைகிறது.
இதையும் படிங்க: டெல்லி ஐகோர்ட் படியேறிய நடிகர் அபிஷேக் பச்சன்.. காரணம் இதுதான்..!!