தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக விளங்குபவர் தேஜா சஜ்ஜா. 2024ஆம் ஆண்டு வெளியான ‘ஹனுமான்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பரவலான கவனத்தைப் பெற்றார். இப்படம், இந்து புராண கதாபாத்திரமான அனுமானை மையப்படுத்திய சூப்பர் ஹீரோ கதையாக அமைந்து, விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

தேஜாவின் நடிப்பு, இப்படத்தில் அனுமந்து குமாராக பாராட்டப்பட்டது. தேஜா சஜ்ஜா,1995ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். 1998இல் குழந்தை நட்சத்திரமாகத் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார். சூடலனி உண்டி (1998) உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் குழந்தை நடிகராக நடித்த இவர், பின்னர், ‘இந்திரா’, ‘கங்கோத்ரி’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் குழந்தை கலைஞராக நடித்தார். குழந்தை வேடங்களில் இருந்து முன்னணி நாயகனாக உயர்ந்த அவரது பயணம், உழைப்பையும் திறமையையும் எடுத்துக்காட்டுகிறது.
இதையும் படிங்க: "மனுஷி" பட வழக்கு.. சென்னை ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு என்ன..??
‘ஹனுமான்’ படத்தில் தேஜாவின் ஆற்றல்மிகு நடிப்பு, அவரது உடல் மொழி மற்றும் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் பார்வையில் உருவான இப்படம், சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, உலகளவில் 350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, ‘ஹனுமான்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜெய் ஹனுமான்’ படத்திலும் தேஜா நடிக்க உள்ளார், இது 2026இல் வெளியாகவுள்ளது.
தேஜா, தனது எளிமையான பேச்சு மற்றும் ரசிகர்களுடனான நெருக்கத்தால் சமூக வலைதளங்களிலும் பிரபலமாக உள்ளார். ‘மிரை’ மற்றும் ‘அடவி’ போன்ற வரவிருக்கும் படங்களில் அவரது பங்களிப்பு, தெலுங்கு சினிமாவில் அவரது இடத்தை மேலும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படங்களில் ஒன்றான 'மிரை' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தேஜா, ஊடகங்கள் மற்றும் ரசிகர்களிடம் தன்னை ஒரு பான்-இந்தியா நடிகர் என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தெலுங்கு படங்களைப் பார்த்து வளர்ந்ததாகவும், தெலுங்கு மொழி படங்களில் மட்டுமே நடித்துள்ளதாகவும், தொடர்ந்து அதையே செய்வேன் என்றும் கூறினார்.
இதனால் தன்னை அப்படி அழைப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார். அதுமட்டுமென்றி "நான் ஒரு கதையை நம்புகிறேன், அதை முழு மனதுடன் திரையில் கொண்டு வர முயற்சிக்கிறேன். பான்-இந்தியா என்ற பட்டம் எனக்கு முக்கியமல்ல; நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து மக்களை மகிழ்விப்பதே எனது இலக்கு" என்று கூறினார்

'மிரை' படத்தில் வில்லனாக மஞ்சு மனோஜ் நடித்திருக்கிறார். மேலும் ஷ்ரேயா சரண், ஜகபதி பாபு, ஜெயராம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் செப்டம்பர் 12 அன்று பல மொழிகளில் வெளியாக உள்ளது. இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக விளங்கும் தேஜா, தனது திறமையால் இந்திய சினிமாவில் புதிய உயரங்களை எட்டுவார் என்பது உறுதி.
இதையும் படிங்க: கவர்ச்சியின் உச்சத்தில் நடிகர் ராஜசேகர் மகள் சிவாத்மிகா..! ஹாட் போட்டோஸ் இதோ..!