தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர், ‘ஹுக்கும்’ என்ற பெயரில் நடத்தவிருக்கும் இசை நிகழ்ச்சி சென்னை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சி, ஆகஸ்ட் 23ம் தேதியான நாளை சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர், மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. இது ‘ஹுக்கும்’ இசை நிகழ்ச்சியின் பிரமாண்ட இறுதி நிகழ்வாக அமையவிருக்கிறது.

‘வொய் திஸ் கொலவெறி டி’ பாடல் மூலம் உலகளவில் புகழ்பெற்ற அனிருத், தனது துள்ளலான இசையால் இளைய தலைமுறையை கவர்ந்தவர். இவரது இசை நிகழ்ச்சிகள், உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சென்னையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக பாதுகாப்பு மற்றும் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அனிருத்தின் ‘ஹுக்கும்’ இசை நிகழ்ச்சிக்கு தடையா..?? ஐகோர்ட்டுக்கு போன விவகாரம்..!!
டிக்கெட் விற்பனை கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முதல் ‘District’ ஆப் மூலம் தொடங்கியது, மேலும் 45 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனால், கூடுதல் டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிகழ்ச்சி, அனிருத்தின் இசையை கொண்டாடும் வகையில் சென்னை மற்றும் புதுச்சேரி ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ‘ஹுக்கும்’ இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு, மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறப்படாமல் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம் எனவும் கூறி, நிகழ்ச்சிக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அனிருத் தரப்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுத்தார். இருப்பினும், நிகழ்ச்சி நடத்துவதற்கு செங்கல்பட்டு காவல்துறையால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு பொறுப்பு காவல்துறையினர் மீது இருக்கும் என்றும் எச்சரித்தார். இதனால், அனிருத் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும் என உறுதியாகியுள்ளது.

இந்நிகழ்ச்சி முன்னர் ஜூலை 26 அன்று திருவிடந்தையில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகப்படியான டிக்கெட் தேவை மற்றும் அனுமதி பிரச்சனைகள் காரணமாக ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அனிருத்தின் ‘ஹுக்கும்’ இசை நிகழ்ச்சிக்கு தடையா..?? ஐகோர்ட்டுக்கு போன விவகாரம்..!!