கிரிப்டோகரன்சி உலகில் மிகப் பெரிய ஸ்டேபிள்காயின் 'யுஎஸ்டிடி' (USDT)யை வெளியிடும் டெதர் நிறுவனம், தற்போது தங்கத்தில் மிகப்பெரிய முதலீடு செய்து அசத்தியுள்ளது. பொதுவாக நாடுகளின் மத்திய வங்கிகள்தான் அதிக அளவு தங்கத்தை வாங்கி வைத்திருக்கும்.
ஆனால், தனியார் நிறுவனமான டெதர் இப்போது சுமார் 140 டன் தங்கத்தை வைத்திருப்பதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி பாவ்லோ ஆர்டோய்னோ தெரிவித்துள்ளார். இதன் மதிப்பு தற்போதைய தங்க விலையின்படி சுமார் 24 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல்) ஆகும்.
டெதர் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் 1 முதல் 2 டன் வரை தங்கத்தை வாங்கி சேர்த்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 70 டன்க்கு மேல் தங்கம் வாங்கியுள்ளது. இது பல நாடுகளின் மத்திய வங்கிகளை விட அதிகம்.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! வரலாற்றின் புதிய உச்சம்..!! எகிறிய தங்கம், வெள்ளி விலை..!!
உதாரணமாக, கிரீஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் தங்க இருப்பை விட டெதரின் அளவு அதிகமாக உள்ளது. இதனால், உலக அளவில் தங்கம் வைத்திருக்கும் டாப் 30 அமைப்புகளில் டெதர் இடம்பிடித்துள்ளது. அரசு அல்லாத தனியார் நிறுவனங்களில் இது மிகப்பெரிய தங்க இருப்பு என கூறப்படுகிறது.

இந்த தங்கத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது ஒரு பழைய அணு ஆயுத பதுங்கு குழி (nuclear bunker) போன்ற உயர் பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல் இடம் என்று ஆர்டோய்னோ விவரித்துள்ளார்.
டெதர் நிறுவனம், அமெரிக்க அரசுப் பத்திரங்கள் அல்லது டாலரில் முதலீடு செய்வதை விட, தங்கத்தில் முதலீடு செய்வது நீண்ட காலத்துக்கு பாதுகாப்பானது மற்றும் லாபகரமானது என்று நம்புகிறது. டாலரின் மதிப்பு குறைவது, புவிசார் அரசியல் ஆபத்துகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
டெதரின் இந்த தங்க வாங்கும் போக்கு, தங்க விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். டெதர் தனது ஸ்டேபிள்காயின் USDTக்கு பின்னால் உள்ள ரிசர்வ்களை வலுப்படுத்துவதற்காகவும், தனது சொந்த தங்கம் அடிப்படையிலான டோக்கன் XAUT-ஐ ஆதரிப்பதற்காகவும் இந்த தங்கத்தை வைத்திருக்கிறது. XAUT டோக்கன்கள் உலகின் தங்கம் அடிப்படையிலான ஸ்டேபிள்காயின்களில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன.
இந்த நகர்வு கிரிப்டோ உலகையும் பாரம்பரிய தங்க சந்தையையும் இணைக்கும் புதிய போக்கை உருவாக்கியுள்ளது. டெதர் போன்ற நிறுவனங்கள் மத்திய வங்கிகள் போல செயல்படத் தொடங்கியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. தங்க விலை உயர்வு தொடரும் நிலையில், டெதரின் இந்த உத்தி எதிர்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: புதிய உச்சம்..!! தொடர் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??