வைணவர்களின் பாண்டி நாட்டுத் திருப்பதிகளில் ஒன்று திருமாலிருஞ்சோலை. இங்கு எழுந்தருளி இருப்பவர் சுந்தரராஜப் பெருமாள். மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலுள்ள திருமாலிருஞ்சோலையில் இருந்து(அழகர் கோவில்) ஒவ்வொரு ஆண்டும், சுந்தரராஜப்பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளி, மண்டூக முனிவரின் சாபத்தைப் போக்கித் திரும்புவதாக ஐதீகம். இதுவே சித்திரைத் திருவிழாவாக நடக்கிறது.

உடமை வர்க்கத்தின் பெருந்தெய்வமான சுந்தரராஜப்பெருமாள் தன்னுடைய ஐதீகக்கோலத்துடன் அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மதுரை வருவதில்லை. ஒரு கையில் வளரித்தடி,மற்றொருகையில் சாட்டைக்கம்பு, தலையில் கொண்டை, காதில் கல்வைத்த கடுக்கண், அரைக்கால் அளவும், இடுப்புக்கு மேலேயும் கருப்புநிற ஆடை என கள்ளர் கோலத்தில்தான் அவர் மதுரை வருகிறார்.
இதையும் படிங்க: பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?
அதே நேரத்தில், கள்ளர் கோலத்துடன் மதுரைக்குள் நுழைவதில்லை. தல்லாகுளம் வந்தவுடன் கள்ளர் கோலத்தைக் கலைத்துவிட்டு, பெருந்தெய்வ வேடமணிந்து வைகை ஆற்றிக்குச் செல்கிறார். அதேபோல் தல்லாகுளம் வரை வந்து, மீண்டும் கள்ளர் வேடம் அணிந்து அழகர்கோவிலுக்கு திரும்புகிறார்.

வைதீகசமய மரபில் பெருந்தெய்வம் என்று பார்ப்பனியத்தால் கட்டமைக்கப்பட்ட கடவுளொன்று, கீழ்சாதியொன்றின் பழக்கவழக்கத்தின் படி வேடமணிந்து, கீழிறங்கி பவனிவருவது வேறெங்கும் இல்லாத, சாஸ்திரங்கள் அனுமதிக்காத ஒரு முக்கிய நிகழ்வாகும்.ஏன்?எப்படி?
மதுரைக்கும், அழகர்கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதி,கள்ளர் இனமக்கள் அதிகமாக வாழ்ந்த மேலூர் கள்ளர் நாட்டுப் பகுதியாகும்.தங்கள் பகுதியில், தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத, வழிபடாத, முன்பின் பார்க்காத பொன்னால் செய்யப்பட்ட விக்கிரகங்கள் தூக்கிச் செல்லப்பட்டபோது அதை மறிததனர் மேலூர்நாட்டுக் கள்ளர்கள்.

மதுரையை ஆண்ட நாயக்கர்களால், கள்ளர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வேறுவழியின்றி கள்ளர் இனமக்களோடு ஒருசமரச ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி உழைக்கும் மக்களின் சாமிபோல வேடமணிந்துதான் கள்ளர்நாடு முழுமையும் பெருமாள் வரவேண்டும். இல்லையேல் கொண்டுசெல்ல அனுமதிக்கமாட்டோம் என்றனர். அதன்படியே முடிவானது.
சக்ராயுதம் கழட்டப்பட்டு, உழைக்கும் மக்களின் ஆயுதமான வளரியைக் கையில் ஏந்திக்கொண்ட பிறகு தான் வைணவக்கடவுள் வைகை நோக்கி வர முடிந்தது. இதுதான் இன்றளவும் நடக்கிறது. இதில் முக்கியமான விசயம் என்ன தெரியுமா? ஆகமங்களின் படியும், பிரம்மபுராணத்தின்படியும், ஒருதெய்வத்திற்கு வேறொரு தெய்வத்தின் மந்திரத்தை உச்சரித்தாலே தீட்டு. அத்தீட்டை நீக்க சம்ரோஷனச் சடங்கு செய்யப்படவேண்டும். ஆனால் இங்கு உருவமே மாற்றப்பட்டுவிட்டது. அதுவும் பார்ப்பனியம் கூறும் கீழ்சாதி உருவம்.

வைகையில் இருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவிலுக்குச் செல்வார்.அங்கு அவரைக் கோவிலுக்கு உள்ளே உடனே கொண்டு செல்லாமல், விளக்குமாற்றால் அடிப்பார்கள் பார்ப்பனர்கள். ஒரு கடவுளையே விளக்கு மற்றால் அடிக்கக் காரணம் யாதெனில், அவர் கீழ்சாதி கள்ளர் வேடம் போட்டதால் தீட்டைக் கழிக்கிறார்களாம்.
அதிகாரமும், ஆட்சிபீடமும், தங்கள் பண்பாட்டை, சமயமரபை,அழிக்க முயலும்போது, உழைக்கும் மக்கள் போராடுகின்றனர். பார்ப்பனியம் அதற்காக தனது கொள்கையில் சமரசமும் செய்து கொள்ளும். ஆனால் தீட்டு தீட்டுதான் என்பதிலும் உறுதியாய் இருக்கும்.கள்ளர் இனமக்களின் போர்க்குரலின் அடையாளமே கள்ளழகர்.
இதில் மேலும் முக்கியமான விசயம் ஒன்று உண்டு.மீனாட்சி கல்யாணத்திற்காக அவர் வருகிறார் என்பது நாயக்கர்கள் காலத்தில் செய்யப்பட்ட இடைச் செருகல் தான். மீனாட்சி திருமணம் தனிக்கதை. மண்டூக முனிவரின் சாபம் போக்குவது தனிக்கதை. இரண்டையும் ஒன்றாக்கியது நாயக்கர்கள் தேவைக்காக செய்யப்பட்டது. ஏனெனில் பெருமாளின் மடியில் அமரவைத்து தான் சிவனுக்கு மீனாட்சி திருமணம் செய்து வைக்கப்படுகிறார் என்ற சிற்பங்கள் கோவிலில் எங்கும் காணலாம். ஆனால், தான் வருவதற்குள் மீனாட்சி திருமணம் முடிந்துவிட்டதாக வைகை வரை வந்து திரும்புகிறார் என்பார்கள்.

மதங்கள் உருவாக்கிய கடவுள்களை எதிர்த்து, உழைக்கும் மக்களின் கலகக்குரலில் எழுந்ததே கள்ளழகர். தங்களின் வழிபாட்டு முறைகள் அவமதிக்கப்படும் பொழுதும், வழிபாட்டு உரிமைகள் நிராகரிக்கப்படும் பொழுதும், தங்களின் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள் புறக்கணிக்கப்படும் பொழுதும், எதிர்த்துப் போராடிய வரலாறு இங்கு ஏராளம். அதில் ஒன்று கள்ளழகர்.
இதையும் படிங்க: சிறிய காரிலும் 5 பாதுகாப்பு அம்சங்கள்.. இனி மாருதி சுசுகி காரை நம்பி வாங்கலாம்!!