தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (செப்டம்பர் 12) பிரிக்ஸ் நாடுகளின் 18-வது உச்சி மாநாடு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தியாவின் தலைமையில் நடைபெறும் இந்த இரண்டு நாள் மாநாடு, வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கும் தெற்கு உலக நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
“ரெசிலியன்ஸ், இன்னோவேஷன், கோஆப்பரேஷன் அண்ட் சஸ்டைனபிலிட்டி” என்ற கருப்பொருளுடன் நடைபெறும் இந்த மாநாடு, இந்தியாவில் நான்காவது முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2012, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியா பிரிக்ஸ் தலைமையை ஏற்று நடத்தியிருந்தது.
பிரிக்ஸ் அமைப்பில் தற்போது இந்தியா, ரஷியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய 11 நாடுகள் முழு உறுப்பினர்களாக உள்ளன. கூடுதலாக பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகியவை நட்பு நாடுகளாக இணைந்துள்ளன. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோரையும், உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கையும் கொண்ட இந்த அமைப்பு, பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் முயற்சியில் முன்னணியில் உள்ளது.
இதையும் படிங்க: ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!
நேற்று நடந்த பிரிக்ஸ் வர்த்தக மன்றக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். இன்று பிற்பகல் 2.35 மணிக்கு பாரத் மண்டபத்தில் மாநாடு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. முதல் அமர்வாக “அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகம் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் மூடிய அமர்வு நடைபெற்றது. இதில் பிரிக்ஸ் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.
மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாக் எல்-சிசி, எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், அபுதாபி இளவரசர், வியட்நாம் பிரதமர், பிரேசில் வெளியுறவு அமைச்சர், நைஜீரியா துணை அதிபர், உகாண்டா துணை அதிபர், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இன்று காலை சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தார். அவர் கடைசியாக 2019-ல் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். 2020-ல் கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு இரு நாடுகளும் உறவைச் சீராக்க முயற்சித்து வரும் நிலையில், இன்று மாலை 5.45 மணிக்கு மோடி-ஜின்பிங் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

வர்த்தகம், முதலீடு மற்றும் எல்லைப் பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனத் தூதர் இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இரு தலைவர்கள் நேரில் சந்திப்பதாகவும், நீண்டகாலக் கண்ணோட்டத்தில் உறவுகளை மேம்படுத்த சீனா தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இன்று காலையில் பிரதமர் மோடி எத்தியோப்பிய பிரதமர், மலேசிய பிரதமர், அபுதாபி இளவரசர் மற்றும் வியட்நாம் பிரதமர் ஆகியோருடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நேற்று ரஷிய அதிபர் புதின் மற்றும் ஈரான் அதிபருடன் சந்திப்பு நடத்தியிருந்தார். மாலையில் தலைவர்கள் பாரத் புத்தாக்க கண்காட்சியைப் பார்வையிடுவார்கள். தொடர்ந்து குழுப் புகைப்படம் எடுப்பதும், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இரவு 7.30 மணிக்கு பிரதமர் மோடி தலைவர்களுக்கு விருந்து அளித்து முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடையும். வர்த்தகம், நிதி, தொழில்நுட்பம், நிலைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாடு, உலகளாவிய சவால்களுக்கு இடையே தெற்கு உலகின் குரலை வலுப்படுத்தும் முக்கிய தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 15,000 போலீஸ்... 200 துணை ராணுவப்படை - டெல்லியை டோட்டல் கன்ட்ரோலில் எடுத்த காவலர்கள்... காரணம் என்ன?