மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காரின் பின்பக்க டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஏழு மாணவர்கள் தங்களுடைய நண்பர்களுடன் புதுச்சேரிக்குச் சென்றிருந்தனர். புதுச்சேரிக்குச் சென்றுவிட்டு, நேற்று இரவு அவர்கள் மீண்டும் சென்னையை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, அதன் பின்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பள்ளத்தில் சென்று கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கத்திப்பாராவில் பரபரப்பு! ஏ.ஆர்.ரஹ்மான் மகனின் சொகுசு கார் விபத்து.... லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்!
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஏழு மாணவர்களும் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடலூர் பகுதியைச் சேர்ந்த தீபக், சென்னையைச் சேர்ந்த ஹரி மற்றும் கரூர் பகுதியைச் சேர்ந்த ராஜபிரகாஷ் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், படுகாயமடைந்த நான்கு மாணவர்களின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் போலீசார் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர்கள் அனைவரும் கம்ப்யூட்டர் சைன்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!