பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெரும் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கடலோரக் காவல்படை முகாம் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டதில் பாகிஸ்தான் துணை ராணுவப்படையைச் சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பலுச் விடுதலை ராணுவம் (BLA) என்ற அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் முகாமை முற்றிலுமாக அழித்துவிட்டதாகவும், பாதுகாப்புப் படையினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தாக்குதல் தொடர்பான 43 வினாடி வீடியோவையும் பலுச் விடுதலை ராணுவம் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. பலுசிஸ்தான் பகுதியில் நீண்டகாலமாக தொடர்ந்து வரும் பிரிவினைவாத இயக்கங்களின் செயல்பாடுகள் மீண்டும் ஒருமுறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: ராணுவம் வெளியேற 24 மணி நேரம் கெடு! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடிக்கும் போராட்டம்!

பலுசிஸ்தான் பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணங்களில் ஒன்று. இங்கு இயற்கை வளங்கள் ஏராளம் இருந்தபோதும், பிரிவினைவாத இயக்கங்கள் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் அவ்வப்போது அதிகரிப்பது வழக்கம்.
இந்தத் தாக்குதல் பாகிஸ்தான் அரசுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. பலுச் விடுதலை ராணுவம் போன்ற அமைப்புகள் தங்கள் தாக்குதல் திறனை அதிகரித்து வருவதாக பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்த சம்பவம் தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலையை மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பாகிஸ்தான் அரசு இந்தத் தாக்குதலை கண்டித்துள்ள நிலையில், பலுசிஸ்தான் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு! 27 பேர் பலி! பாக்., ராணுவம் மீது கூட்டு அவாமி அதிரடிக்குழு புகார்!