அனைத்து துறைகளிலும் பிரதானமான நகரமாக இருந்து வருகிறது வந்தாரை வாழ வைக்கும் சென்னை. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு குடிப்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. மாணவர்கள் தொடங்கி வேலை பார்ப்பவர்கள் என ஒவ்வொருவரும் தங்கள் கனவை நிறைவு செய்து கொள்வதற்காக சென்னையைத் தேடி ஆண்டுதோறும் வந்து கொண்டே இருக்கின்றனர்.

அந்த வகையில் எதையும் தாங்கும் இதயம் என்று போல் சென்னையும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு கூட்டாக குவியும் மக்களை தாராளமாக கையை விரித்து அணைத்துக் கொள்கிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நாலடி இருக்கும் இடத்தில் 100 பேர் தங்கும் சூழலை உருவாக்கி வருகிறது என்றே சொல்லலாம். இதனால் விலை மானியங்கள், பொருட்களின் தேவைகள் என அனைத்தும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரத்தான மெட்ரோ ரயில்... பயணிகள் அவதி; காரணம் இதுதானாம்!!
மக்கள் தொகையால் நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் வருவதையும் தடுக்க முடியாது அதே சமயத்தில் மக்களின் அத்தியாவசியத்தையும் நிறைவேற்றாமல் இருக்க முடியாது என கருதி வளர்ச்சி திட்டத்தில் ஒன்றான மெட்ரோ திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி தப்பிக்க ஒரு பெரும் உதவியாக அமைந்துள்ளது.

முன்னதாக 2015 ஆம் ஆண்டு சென்னையில் மெட்ரோ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் பயனாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவானதாகவே இருந்தது. ஆனால் அதன் பயனும் அதன் சிறப்பு அம்சங்களும் நாளடைவில் மக்களை தன்வசப்படுத்தியது. குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்ல தவித்த மக்கள், மெட்ரோ திட்டத்தினால் அதனை எளிதாக்க முடிந்தது. இதனால் மெட்ரோவின் பயனாளர்கள் மளமளவென அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிசமான உயர்வை கண்டது. அந்த வகையில் மெட்ரோ திட்டம் தொடங்கியது முதல் இன்று வரை, ஒவ்வொரு மாதமும் மெட்ரோ பயனாளர்களின் எண்ணிக்கையை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜூன் மாதத்தில் மட்டும் 92,19,925 பேர் மெட்ரோ ரயிலை பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஜூன் 27ம் தேதி 3,72,503 பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளனர் என்றும் கடந்த மாதத்தில் பயண அட்டைகளை 6,09,226 பேரும், க்யூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 42,07,124 பேரும், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 44,03,575 பேரும் பயணித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பேர், பிப்ரவரியில் 86,65,803 பேர், மார்ச்சில் 92,10,069 பேர், ஏப்ரலில் 87,89,587 பேர், மே மாதத்தில் 89,09,724 பேர் சென்னை மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! வேற லெவலுக்கு போகும் சென்னை.. வணிக வளாகம் வழியாக மெட்ரோ ரயில்..!