தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்துடனும், பாதுகாப்புடனும் நடைபெற்று முடிந்துள்ளது. புத்தாண்டு ஈவ் முதல் புத்தாண்டு நாள் வரையிலான கொண்டாட்டங்களில் சாலை விபத்துகள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று தமிழ்நாடு காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை முன்கூட்டியே விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. சென்னை மாநகரில் மட்டும் 25,000க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மெரினா, எலியட்ஸ் பீச், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்தன. கடலில் இறங்கவோ குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டது. ஈசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் கொண்டாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. மது அருந்தி வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸிங், ராஷ் டிரைவிங் ஆகியவற்றைத் தடுக்க 425க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டன.
மாநிலம் முழுவதும் 90,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஃப்ளைஓவர்கள் அனைத்தும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்பட்டிருந்தன. பட்டாசு வெடித்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டது. கடலோரப் பாதுகாப்புக்கு கடலோரக் காவல் படை மற்றும் லைஃப்கார்டுகளுடன் இணைந்து போலீசார் செயல்பட்டனர். ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு நடத்தப்பட்டது. அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.இந்த கடும் நடவடிக்கைகளால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைதியாகவும், விபத்துகள் இன்றியும் நடைபெற்றன.
இதையும் படிங்க: பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? அதிமுகவுடன் நாளை தொகுதி பங்கீடு முடிவு? வலுக்கும் எதிர்பார்ப்பு...!
கோயில்களில் பிரார்த்தனைகள், கடற்கரைப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் கூட்டங்கள், வீடுகளில் குடும்பத்துடன் கொண்டாட்டங்கள் என தமிழ்நாடு மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். இந்த புத்தாண்டு விபத்தில் இல்லா புத்தாண்டாக கொண்டாடியுள்ளோம் என காவல்துறை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தலைவா... தலைவா... அந்த சத்தம் இருக்கே..! ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து..!