தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழக வேட்பாளரான சத்யபாமா பேசுவதாகக் காட்டப்பட்ட அந்த வீடியோவில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தான் முப்பத்தொரு கோடி ரூபாய் செலவு செய்ததாகவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு பைசா கூட கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிடுவதாக உள்ளது.
மேலும், அந்தச் செலவுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், அமைச்சர்களுக்காக ரிசார்ட் அறைகளுக்கும் உணவுக்கும் பல லட்சம் ரூபாய் செலவழித்ததாகவும், கூட்டணிக் கட்சியினருக்கு விமான டிக்கெட் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்ததாகவும் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ வாக்குப்பதிவு தொடங்கும் தருணத்தில் வெளியானதால் தொகுதி மக்களிடையே குழப்பமும் விவாதங்களும் எழுந்தன.சத்யபாமா இந்த வீடியோவை முழுமையாக மறுத்தார்.

அது சித்தரிக்கப்பட்ட போலி வீடியோ என்றும், தனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் எதிர்ப்புத் தரப்பினர் இத்தகைய பொய்யான உள்ளடக்கத்தைப் பரப்புவதாகவும் அவர் விளக்கம் அளித்தார். வாக்குச் சாவடியில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தெளிவாக உள்ளனர் என்றும், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த விவகாரத்தைத் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தகுதி நீக்கம் செய்யுங்கள்"..! சிக்கலில் சத்தியபாமா...! போர்கொடி தூக்கும் திமுக..!!
இந்தச் சர்ச்சைக்கு மத்தியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேட்டி அளித்தார். அவர் இந்த வீடியோ முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது எனத் தெளிவாகக் கூறினார். திமுக தரப்பில் காலை பத்து மணிக்கு இதை வெளியிட்டபோதே அது ஏஐ வீடியோ என்பது தெரிந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். வாக்குப்பதிவுக்கு முன் குழப்பத்தை உண்டாக்கும் நோக்கில் இத்தகைய போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், தங்களாலும் இதே போன்ற ஏஐ வீடியோக்களை உருவாக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!