அசாம் மாநிலம் கர்பி அங்லாங் (Karbi Anglong) மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் முன்னணிப் போர் விமானமான சுகோய் Su-30 MKI இன்று மாலை ரேடார் தொடர்பிலிருந்து மாயமாகியுள்ளது. விமானத்தைத் தேடும் பணிக்காக விமானப்படை மற்றும் மீட்புக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அசாமின் ஜோர்ஹாட் (Jorhat) விமான தளத்திலிருந்து இன்று மாலை வழக்கமானப் பயிற்சிக்காகப் புறப்பட்ட இந்த விமானம், இரவு 7:42 மணி அளவில் ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. கர்பி அங்லாங் மாவட்டத்தின் ரங்க்கெலான் (Rangkhelan) மலைப்பகுதியில் இந்த விமானம் மாயமானது. அப்பகுதி கிராம மக்கள் மலை உச்சியில் ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும், தீப்பிழம்பு தெரிந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இது விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடர்ந்த காடுகள் மற்றும் மலைப்பாங்கானப் பகுதி என்பதால், விமானத்தைத் தேடும் பணியில் பெரும் சவால்கள் நிலவுகின்றன. விமானப்படையின் தேடுதல் மற்றும் மீட்பு (Search and Rescue) குழுவினர், உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து தேடுதல் பணியைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: குவைத்தில் பரபரப்பு! 3 அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! விமானிகள் 6 பேர் உயிர் தப்பினர்!
மாயமான விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை. அவர்கள் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார்களா அல்லது விமானத்துடன் விபத்துக்குள்ளானார்களா என்பது தேடுதல் வேட்டைக்குப் பிறகே தெரியவரும்.
இந்திய விமானப்படையின் முதுகெலும்பாகக் கருதப்படும் சுகோய் ரக விமானங்கள் அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்பிற்காகத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 3-வது முறையாக விபத்தில் சிக்கிய தேஜஸ்..,! ஆத்மநிர்பர் பாரத் திட்டத்திற்கு பின்னடைவா?