கோவை மாநகரம் தொழில், கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டிலேயே விரைவாக முன்னேறி வரும் நகரங்களில் கோவை முக்கிய இடம் பிடித்துள்ளது. மக்கள் தொகை 30 லட்சத்தைத் தாண்டியுள்ள இந்நகரத்திற்கு தினமும் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வருகை தருவதால், சாலை போக்குவரத்து நெரிசல் கடுமையான சவாலாக உருவெடுத்துள்ளது.

இதனைத் தணிக்கும் வகையில், கோவை மாநகரத்தில் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. உக்கடம், காந்திபுரம், கணபதி, வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே மேம்பாலங்கள் செயல்பாட்டில் உள்ளன. சாய்பாபா காலனி பகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மிக முக்கியமானது, அவிநாசி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலமான ஜி.டி. நாயுடு மேம்பாலம் ஆகும்.
இதையும் படிங்க: கோவையில் பரபரப்பு: கெமிக்கல் கடை தீ விபத்தில் சிக்கிய 40 பேர் மீட்பு! மக்கள் அலறியடித்து ஓட்டம்!
10.10 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலம், கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை நீண்டு செல்கிறது. கடந்த நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட இது, கோவையின் இதயப்பகுதியை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்குகிறது. இப்பகுதியில் பல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால், இதன் மூலம் போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளது.
ஆனால், நீண்ட தூரம் என்பதால் சிலர் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவது, சாகச செயல்களில் ஈடுபடுவது, சட்டவிரோத ரேசிங் போன்றவை அதிகரித்துள்ளன. இதனால் விபத்து அபாயம் உயர்ந்துள்ளது. இந்தப் பிரச்சினைகளைத் தடுக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்தது.
தற்போது, மாநில நெடுஞ்சாலைத் துறையின் சிறப்புத் திட்டப் பிரிவு இப்பணிகளைத் தொடங்கியுள்ளது. மொத்தம் 10 கிலோமீட்டர் தூரத்தில் 45 ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் அதிவேகம், ஹெல்மெட் அணியாமை, சீட் பெல்ட் அணியாமை, ட்ரிபுள் ரைடிங், அதிக சுமை ஏற்றுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை தானாக கண்டறிந்து பதிவு செய்யும் திறன் கொண்டவை.

மேலும், மேம்பாலத்தில் 18 எல்இடி திரைகள் அமைக்கப்பட உள்ளன. விதிமீறும் வாகனங்கள் குறித்த விவரங்கள் இத்திரைகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த அமைப்பு காவல்துறை மற்றும் ஆர்டிஓ அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டு, செலான் மூலம் அனுப்பும் வசதியும் உள்ளது.
இப்பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் மேம்பாலத்தில் விபத்துகள் மற்றும் விதிமீறல்கள் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இது ஒரு முக்கிய அடியாக அமையும்.
இதையும் படிங்க: கோவை பெரியார் அறிவுலகம்: பிப்ரவரி 10-க்குள் பணிகள் நிறைவடையும்.. அமைச்சர் எ.வ.வேலு அதிரடி!