தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் நாளை காலை 11 மணியுடன் தொடங்கி ஏப்ரல் 6 வரை நீடிக்கும் என்பதால், கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை விரைவாக வெளியிட்டு வருகின்றன.
அதிமுக இந்தத் தேர்தலில் 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே முதல் இரு கட்டங்களாக 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று மூன்றாம் மற்றும் இறுதிக் கட்டமாக மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இந்தப் பட்டியலில் முக்கிய ட்விஸ்ட்டாக, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்குக்கு திருவிக நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
இதையும் படிங்க: இன்று வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை!! இடம்பெறும் கவர்ச்சிகர அறிவிப்புகள்!! நீளும் இலவசங்கள்!!
பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஆவார். கணவரின் மறைவுக்குப் பிறகு அவர் ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொற்கொடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், “தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் திருவிக நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம். என்.டி.ஏ. கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், “எனது கணவரின் கொலைக்கு நீதி கேட்டு நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். திருவிக நகர் தொகுதியில் எங்களுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருப்பேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுகவின் இந்த முடிவு சென்னை திருவிக நகர் தொகுதியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் பின்னணி மற்றும் அவரது சமூகப் பணி இந்தத் தொகுதியில் கவனத்தை ஈர்க்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் சந்தான கிருஷ்ணன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் ஆதிராஜாராம் உள்ளிட்டோரும் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குவதால், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் ஆவணங்களைத் தயாரித்து மனு தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அனைத்து கட்சிகளும் விதிமுறைகளை கடைப்பிடித்து பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இந்தத் தேர்தல் தமிழக அரசியலில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இரட்டை இலை சின்னத்தில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!! திருவிக நகர் தொகுதியில் போட்டி!!