சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் எனும் 27 வயது இளைஞரின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்திய ஒரு கொடூரமான சம்பவமாக அமைந்தது. இது ஒரு சாதாரண நகை திருட்டு புகாரில் தொடங்கி, காவல்துறையின் மிருகத்தனமான தாக்குதலால் கொலை வழக்காக மாறியது. ஜூன் 27, 2025 அன்று, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா எனும் பெண் பேராசிரியை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தார்.
அவரது காரில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக அவர் திருப்புவனம் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமாரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்ல தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். தொடர்ந்து அஜித் குமாரை போலீசார் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலின் போது ஒரு கோவில் ஊழியர் சக்தீஸ்வரன் என்பவர் வீடியோ பதிவு செய்தார். அதில் போலீசார் அஜித்தை தரையில் உட்கார வைத்து மிருகத்தனமாக அடிப்பது தெளிவாகத் தெரிகிறது.

அஜித் வலியால் கதறியபடி இருந்தார். இந்த வீடியோ பின்னர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜூன் 28 அன்று காலையில் அஜித் குமார் உயிரிழந்தார். அவரது உடலை மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. உடலில் 44-க்கும் மேற்பட்ட வெளி காயங்கள், உட்புற ரத்தக்கசிவு, தலையில் ரத்தக்கசிவு, சிகரெட் எரிச்சல் காயங்கள், வயிற்றுப் பகுதியில் குத்து காயம் உள்ளிட்ட பல கொடூரமான காயங்கள் கண்டறியப்பட்டன. இந்த சம்பவம் வெளியான பிறகு, மதுரை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடும் கண்டனத்தை வெளியிட்டது.
இதையும் படிங்க: “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!
வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் காவல் நிலைய கஸ்டடி மரணம் தான் என சிபிஐ விளக்கம் அளித்துள்ளது. அஜித் குமார் மரணம் காவல் நிலைய கஸ்டடி மரணம் என்பது உறுதியாகி இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விளக்கம் கொடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அஜித் குமார் மரண வடக்கை விசாரிக்கும் ஹைகோர்ட் கிளை நீதிபதி மனம் பதறுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார். அடித்துக் கொன்ற யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும் என்றும் மனம் பதறுகிறது எனவும் வருத்தம் தெரிவித்தார். ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு அடித்துக் கொலை செய்து விட்டதாகவும் புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. ஒன்றுமில்லாத விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள் என்றும் காவல்துறையினருக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும் நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!! 234 தொகுதிகள்..!! வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்..!!