மேற்காசியப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலவரத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நாளை (மார்ச் 25, புதன்கிழமை) மாலை 5 மணிக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து உயர்மட்ட கூட்டம் நடத்த உள்ளது. இந்தக் கூட்டத்தில், போரின் விளைவாக ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களின் விநியோகப் பாதிப்பு மற்றும் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முன்னதாக, இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஒரு முக்கிய மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு சூழலை மதிப்பீடு செய்வதோடு, இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்துவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி, விமானப் படைத் தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) தலைவர் சமீர் காமத் உள்ளிட்ட உயர்மட்ட இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
வளைகுடா பகுதியில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியுடன் ஈரான் இடையே நடைபெறும் மோதல் மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்கிறது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் தளங்கள் அமைந்துள்ள பல பகுதிகளை இலக்காக்கி தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த மோதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தொகுதி பங்கீடு தீவிரம்..! சீக்கிரம் வந்து சேருங்க..! டெல்லிக்கு பறந்த TTV தினகரன், அன்புமணி..!

இந்தப் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளது. உலகின் முக்கிய எரிசக்தி போக்குவரத்து வழியான இந்த நீரிணை மூடப்பட்டதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் தடைகளை எதிர்கொள்கின்றன. இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து, பெட்ரோலியத் துறை அதிகாரிகள் உடனடியாக நிலைமையை கண்காணித்து விநியோகத்தை ஒழுங்குபடுத்தினர். பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதாமல் தடுக்கவும், தேவையான நெறிமுறைகளை பின்பற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அரசின் உயர்மட்ட அதிகாரிகள் இந்த சூழலை தினசரி அடிப்படையில் கண்காணித்து, பொதுமக்களுக்கு தெளிவான விளக்கங்களை அளித்து வருகின்றனர். இந்த நிலவரத்தை கருத்தில் கொண்டு, கடந்த மார்ச் 22 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. அத்தியாவசியப் பொருட்கள், குறிப்பாக பெட்ரோலியப் பொருட்கள், உரங்கள், மின்சாரம் உள்ளிட்டவற்றின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இறக்குமதி ஆதாரங்களை பல்வகைப்படுத்துதல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல் உள்ளிட்ட நீண்டகாலத் திட்டங்களும் இதில் விவாதிக்கப்பட்டன.
மேற்காசிய மோதல் தொடர்பான சமீபத்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வரும் நிலையில், நாளைய அனைத்துக் கட்சி கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தேசிய நலனை முன்னிறுத்தி ஆலோசனைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தனது நடுநிலைப் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்து, உரையாடல் மற்றும் இராஜதந்திர வழிகளின் மூலம் போர் முடிவுக்கு வர வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க: அதிமுக கோட்டைகளுக்கு குறிவைக்கும் அமித் ஷா... இன்று அவசரமாக டெல்லி விரையும் இபிஎஸ்... டீலை முடிக்க ரகசிய மீட்டிங்...?!