சென்னை: பா.ம.க.வுக்குள் நீண்டகாலமாக நிலவும் அப்பா-மகன் இடையேயான பிளவு, இந்த சட்டசபைத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் தீவிரமாக வெளிப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சவுமியா இருவரும் தங்கள் சொந்தத் தொகுதிகளை விட, பென்னாகரம் தொகுதியிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
பா.ம.க.வின் பெரும்பாலான நிர்வாகிகளும் துடிப்பான தொண்டர்களும் அன்புமணி போட்டியிடும் தொகுதிக்கு முன்னுரிமை கொடுப்பது வழக்கம். இதனால் மற்ற வேட்பாளர்கள் உள்ளுக்குள் வருத்தப்படினும் வெளியே சொல்ல முடியாத நிலை உள்ளது.
ஆனால் இம்முறை காட்சி மாறியுள்ளது. அன்புமணியின் மனைவி சவுமியா தர்மபுரியில் போட்டியிடும் நிலையில், பா.ம.க.வினர் தர்மபுரியை விட பென்னாகரத்துக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அன்புமணியும் பென்னாகரத்திலேயே அதிக நேரம் செலவிடுகிறார்.
இதையும் படிங்க: கை நழுவிய மாம்பழம்!! சிலிண்டர், குக்கர், பச்சை மிளகாய் சின்னங்களில் போட்டியிடும் ராமதாஸ் தரப்பு!
பென்னாகரம் பா.ம.க.வுக்கு சென்டிமென்ட் தொகுதி. 2010ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் பா.ம.க. வேட்பாளர் தமிழ்குமரன் 41,285 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்து, வன்னியர் ஓட்டு வங்கியை நிரூபித்தார். ஆனால் இப்போது அதே தமிழ்குமரன், ஜி.கே.மணியின் மகன், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் பென்னாகரத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பா.ம.க. சார்பில் பாடி செல்வம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

ராமதாஸ்-அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, இளைஞரணி தலைவர் பதவி தமிழ்குமரனுக்கு வழங்கப்பட்டது. அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழ்குமரன் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதுவும் குடும்பப் பிளவுக்கு ஒரு முக்கிய காரணம் என கட்சியினர் கூறுகின்றனர். அன்புமணி, “என்னையும் அப்பாவையும் பிரித்தவர் ஜி.கே.மணி. அவர் ஸ்டாலினின் கைக்கூலி. தமிழ்குமரன் உதயநிதியின் கைக்கூலி” என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
சவுமியாவும் பென்னாகரத்தில் தீவிரம் காட்டி வருகிறார். “தர்மபுரியில் நான் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என வாழ்த்துகின்றனர். ஆனால் பென்னாகரத்தில் நம் துரோகியை அதிக வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும் என்பதே என் ஆசை” என அவர் பேசி வருகிறார். கிளைக்கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து தமிழ்குமரனை தோற்கடிக்க வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பா.ம.க.வினரின் கவனம் இப்போது பென்னாகரம் பக்கம் திரும்பியுள்ளது. வன்னியர் சமூகத்தினரிடையே ‘துரோகி’ என்ற பெயர் பெற்ற தமிழ்குமரனை தோற்கடிப்பதில் பா.ம.க. அதிதீவிரம் காட்டி வருகிறது. இந்தத் தொகுதியில் ஏற்படும் முடிவு, பா.ம.க.வின் எதிர்கால அரசியலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பென்னாகரத்தில் மகனுக்கு போட்டியாக நீதான் களம் இறங்கணும்!! ஜி.கே.மணிக்கு அழுத்தம் தரும் பாமக ராமதாஸ்!!