அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் சிந்தூர் மண்டலத்தில் உள்ள துளசிபகலு காட் சாலையில் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, நிதியுதவி அறிவித்து உள்ளார்.
சிந்தூரிலிருந்து மாரேடுமில்லி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஓட்டுநர்கள் உட்பட 35 பயணிகள், பத்ராசலம் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் முடித்துக்கொண்டு, அன்னவரம் நோக்கி பேருந்தில் சென்றுள்ளனர்.
சிந்தூர்-மாரேடுமில்லி காட் சாலையில் சென்று கொண்டிருந்த போது திருப்பத்தில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பேருந்து முற்றிலும் சேதமடைந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மீதமிருந்தவர்கள் பேருந்தின் ஜன்னலை உடைத்துக்கொண்டு தப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: மத்திய அரசின் திட்டங்கள் பெயரில் கஜானா நிரப்பிய பாஜக... காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு...!

சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், காவல்துறையினரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். அந்தப் பகுதி காட்டுப் பகுதி என்பதால், மீட்புக் குழுவினர் பள்ளத்தாக்கில் இறங்கி நடவடிக்கையைத் தொடர்கின்றனர். பேருந்து முழுவதுமாக நிரம்பியிருந்ததால் உயிர் இழப்பு அதிகமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். முதற்கட்ட தகவலின் படி 15 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அச்சப்படுகிறது. மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஆந்திராவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனையளிக்கிறது என்றும் இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தனது எண்ணங்கள் உள்ளன என்றும் கூறினார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கு PMNRF இலிருந்து ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வந்தே மாதரம் 150..! நெருக்கடி நிலையில் நூற்றாண்டு விழா… தலைமுறைகளைக் கடந்தும் உத்வேகம்… பிரதமர் பெருமிதம்…!