சென்னை: தமிழகத்துக்கு வர வேண்டிய பெரிய தொழில் முதலீடுகளை ஆந்திர அரசு தங்கள் மாநிலத்துக்கு ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள ஆந்திராவின் ‘ஸ்ரீ சிட்டி’ தொழில் பூங்காவை விரிவாக்கம் செய்யும் பணிகளை அம்மாநில அரசு வேகப்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க ‘சிப்காட்’ தொழில் பூங்காக்களை அரசு அமைத்து வருகிறது. சென்னை விமான நிலையம், துறைமுகங்கள், சாலை மற்றும் ரயில் வசதிகள் காரணமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொழில் தொடங்க விரும்புகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், மாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தொழில் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்த இடங்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அது தேவையே இல்ல! கொளுத்திப்போட்ட செங்கோட்டையன்! கொந்தளித்த அன்பில் மகேஷ்!!
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மாநெல்லூரில் 2,200 ஏக்கரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்து நிலம் கையகப்படுத்தியும் உள்ளது. ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால் உள்கட்டமைப்பு பணிகள் தாமதமாகி வருகின்றன.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் துறை நிறுவனங்கள் மாநெல்லூரில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஆனால் திட்டம் தாமதமாவதால் ஆந்திர அரசு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.
சென்னையிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ சிட்டியை (7,500 ஏக்கர்) விரிவாக்கம் செய்து மோட்டார் வாகனம், உணவு உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் பணியில் ஆந்திரா ஈடுபட்டுள்ளது.
தொழில் துறை வட்டாரங்கள் கூறும்போது, “மாநெல்லூர் தொழில் பூங்காவுக்கான சட்ட சிக்கல்களை விரைவாக தீர்த்து உள்கட்டமைப்பு பணிகளைத் தொடங்கினால் பல நிறுவனங்கள் உடனடியாக முதலீடு செய்ய முன்வரும்” என்று தெரிவித்தனர்.
தமிழக அரசு இந்த வாய்ப்பை இழக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொழில் நிறுவனங்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: பழுதாகி நின்ற பஸ் மீது மோதிய லாரி!! உடல் உருக்குலைந்து 5 பேர் பலி!! பலர் படுகாயம்!