சென்னை: தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜாமினில் வெளியே வந்த சம்பவம் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டதாகக் கருதும் அரசு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி கடந்த 3-ம் தேதி அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் சில மணி நேரம் விசாரிக்கப்பட்ட அவர், இரவு 10.30 மணியளவில் திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நள்ளிரவு 12 மணிக்கு நீதிபதி நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தவெக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே ஜாமினில் வெளியே வர அனுமதித்தது போலீஸ் தரப்பின் தவறு என அரசு வட்டாரங்கள் கருதுகின்றன. அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகள் ஜாமின் பெறக்கூடியவை என்பதால், அவரை நீதிமன்றக் காவலில் அனுப்ப போலீசார் போதிய முயற்சி எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..! அனிதா ராதாகிருஷ்ணன் கைது! கனிமொழி ஆவேசம்!

தி.மு.க. தரப்பில், “அனிதா ராதாகிருஷ்ணன் மீது பதிவான வழக்குகள் ஜாமினுக்கு உகந்தவை. ஆனாலும் அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்ற காவல் கோரினார். ஆனால் போலீசார் உரிய ஆதாரங்களுடன் வாதாடவில்லை” என்று விமர்சனம் செய்யப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் மற்றும் மக்கள் பிரதிநிதி என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த மாட்டார் என்றும், 41-ஏ நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் அவசரமாக கைது செய்யத் தேவையில்லை என்றும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்தச் சம்பவத்தால் தவெக அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகக் கருதும் முதலமைச்சர் விஜய் தரப்பு, இந்த வழக்கை கையாண்ட அதிகாரிகள் மீது அதிருப்தி தெரிவித்துள்ளது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் மெத்தனமாக இருந்த போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணன் வரும் 10-ம் தேதி ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராக உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்கும் முதல்வர்! நயினார் விளாசல்!