தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் பிரம்மாண்ட திட்டத்தின் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். ரூ.4,276.44 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்த மூன்றாவது புதிய குடிநீர் ஆலை தினசரி 40 கோடி லிட்டர் கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் இலக்குடன் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் முடிவடைந்தவுடன் சுமார் 22 லட்சம் மக்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான தாம்பரம், ஓஎம்ஆர், ரேடியல் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாகத் தீர்க்கும் வகையில் இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை உதவியுடன் சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் மிகப் பெரிய திட்டங்களில் ஒன்றாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் 6 லட்சம் பேர்... எப்போது கிடைக்கும்..??
முதலமைச்சர் விஜய், திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை விரிவாகப் பார்வையிட்டார். பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சென்னையின் வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் நகர விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு, மழைநீர் சார்ந்த தண்ணீர் ஆதாரங்களுக்கு மாற்றாக நம்பகமான கடல்நீர் ஆதாரத்தை உருவாக்கும் இந்தத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பணிகளில் ஏதேனும் தாமதம் ஏற்படாமல் திட்டம் டிசம்பர் 2026-க்குள் முடிக்கப்படும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: "பட்ஜெட்"..! எகிறும் எதிர்ப்பார்ப்பு... முதல்வர் விஜய் துறைவாரியாக ஆலோசனை..!!