தமிழகத்தில், தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற பணியாளர்கள் சுமார் 2,000 பேர் உள்ளனர். தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிபவர்கள்தான், கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்து, அடுத்த நிலையில் உள்ள மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கொண்டு செல்பவர்கள் இவர்கள் தான்.
தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும், தமிழக அரசு ஓய்வூதியம் வழங்குவதில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இது குறித்து, தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம், பலமுறை கோரிக்கை எழுப்பியும், தமிழக அரசு பாராமுகமாக இருப்பது துரதிருஷ்டவசமானது என்று கூறினார். பொதுவாக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமானது, ₹1,000 முதல், ₹2,734 வரையே வழங்கப்படுகிறது என்றும் மிகவும் குறைந்த மாத வருமானம் காரணமாக, பெரும்பாலான தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள், இந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணையாததால், அவர்களுக்கு இந்தக் குறைந்தபட்ச ஓய்வூதியம் கூட கிடைக்காமல் மிகவும் கடினமான சூழலில் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

விவசாயிகளிடம் நேரடியாகப் பால் கொள்முதல் செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை என்றும் அதற்கு தனி நிதியம் அமைக்கவில்லை என்றும் ஆனால், அவர்கள் கொள்முதல் செய்த பாலை, அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் இரண்டாம், மூன்றாம் கட்ட நிலையிலுள்ள ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்க, தனி நிதியம் பராமரிக்கப்பட்டு, ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்பது, ஊழியர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: பயமா இருக்கா? அடுத்த வருஷம் இன்னும் பயங்கரமா இருக்கும்... திமுகவுக்கு சவால்விட்ட அண்ணாமலை...!
உடனடியாக, பால் உற்பத்தித் துறையில், மாவட்ட மற்றும் மாநில அளவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல, தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க, தனி நிதியம் அமைத்து, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அவர்களின் இதர கோரிக்கைகளான, மருத்துவக் காப்பீடு, தினசரி 500 மி.லி. பால், மற்றும் பண்டிகை காலங்களில் ஆவின் இனிப்பு, நெய் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துவதாகவும் அண்ணாமலை கூறினார்.
இதையும் படிங்க: ரொம்ப பெருமை பீத்திக்காதீங்க ஸ்டாலின்.. பேட்ச்வொர்க் மாடல் அரசு என கிண்டலடித்த அண்ணாமலை..!!