கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா குறித்தத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள தென் கைலாய பக்திப் பேரவையின் தன்னார்வலர்கள் ரவீந்திரன் மற்றும் சரவணன் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

பிப்ரவரி 15-ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் (பிப். 16) காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா இடைவிடாமல் நடைபெற உள்ளது. இதில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள் மற்றும் ஆதியோகி முன்பு சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்குப் பெரிய அளவில் மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த மகா அபிஷேகம் இந்த ஆண்டுதான் முதன்முறையாகச் சத்குருவால் முன்னெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இனி எஸ்கேப் ஆகவே முடியாது..!! கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் வரப்போகுது ஹைடெக் மாற்றம்..!! என்ன தெரியுமா..??
இந்த 32-வது ஆண்டு விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார். அவருடன் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், கலைத் துறையினர் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானப் பக்தர்கள் நேரிலும், கோடிக்கணக்கான மக்கள் நேரலையிலும் இந்த விழாவில் இணைய உள்ளனர். லட்சக்கணக்கானப் பக்தர்கள் வருகை தருவதால், அவர்களின் வசதிக்காக விரிவான பார்க்கிங் (Parking) வசதிகள், சுத்திகரிக்கப்பட்டக் குடிநீர், தற்காலிகக் கழிவறைகள் மற்றும் அவசர மருத்துவ வசதிகள் ஈஷா மையத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளன. இசை மற்றும் நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் இரவு முழுவதும் நடைபெற உள்ளன.
ஈஷாவில் நடைபெறும் இந்த மகா சிவராத்திரி விழா உலகத்தரம் வாய்ந்த ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படுவதால், கோவையில் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கோவையில் பரபரப்பு: கெமிக்கல் கடை தீ விபத்தில் சிக்கிய 40 பேர் மீட்பு! மக்கள் அலறியடித்து ஓட்டம்!