தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர்கள் விடுதிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவை பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை தங்கி படிக்க உதவும் இலவச விடுதிகளாகும். தமிழகம் முழுவதும் சுமார் 1300க்கும் மேற்பட்ட இத்தகைய விடுதிகள் செயல்படுகின்றன.
மாணவர் விடுதிகள் மூடப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், 100 க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்த 1,331 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில், தற்போது, 1,200 மாணவர் விடுதிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன என்றும் 100 க்கும் அதிகமான விடுதிகள் மூடப்பட்டுள்ளன., சுமார் 98,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட இந்த விடுதிகளில், தற்போது, 65,000 மாணவர்கள் மட்டுமே தங்கி படித்து வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அவரு எங்க இளந்தலைவர் யா... உதயநிதி தலைமையேற்றால் என்ன தவறு? அமைச்சர் ரகுபதி பிரஸ் மீட்...!

சுத்தமான அறைகள், சுகாதாரமான குடிநீர், தரமான உணவு என்ற அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்கப்படாததால், மாணவர்கள், இந்த விடுதிகளில் சேர்ந்து படிக்க விருப்பம் காட்டுவதில்லை எனவும் அண்ணாமலை தெரிவித்தார். குறிப்பாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தரமற்றதாக இருப்பதால், அது வீணாகி, கால்நடைகளுக்கு உணவாக விற்கப்படுவதை, ஏற்கனவே சுட்டிக் காட்டி இருந்ததாகவும், பட்டியல் சமூக மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க வேண்டும் என இந்த மாணவர் விடுதிகள் அமைக்கப்பட்ட நோக்கத்தையே, திமுக அரசு சிதைத்துவிட்டது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பட்டியல், பழங்குடி சமூக மக்கள் முன்னேற்றத்துக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியைச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. அந்த நிதியை, இந்த விடுதிகளை மேம்படுத்தப் பயன்படுத்துவதிலிருந்து, திமுக அரசை எது தடுக்கிறது என்ற கேள்வியை அண்ணாமலை முன் வைத்துள்ளார்.
இந்த அழகில், சமூக நீதி விடுதி என்று பெயர் மாற்றம் செய்தோம் என, இரண்டு நாட்கள் விளம்பர நாடகம் நடத்தி, தனக்குத் தானே பெருமை பேசிக் கொண்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, பட்டியல் சமூக மக்கள், மாணவர்கள் முன்னேற்றத்தில் முதலமைச்சர் காட்ட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: முழு பூசணிக்காய சோத்துல மறைக்குறாரு… காலிப் பணியிட விவகாரத்தில் மா.சு.வை சூறையாடிய மாஜி அமைச்சர்…!