சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மஹாராஷ்டிராவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி சூரஜ் மீது கஞ்சா போதையில் இருந்த கும்பல் கொடூரமாகத் தாக்குதல் நடத்திய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இச்சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் திமுக ஆட்சியில் தமிழகம் காட்டாட்சி ராஜ்ஜியமாக மாறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.
அண்ணாமலை தனது அறிக்கையில், “திருத்தணியில் பணிபுரியும் மஹாராஷ்டிரா இளைஞர் சூரஜ் கஞ்சா போதையில் இருந்த கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். ரீல்ஸ் எடுப்பதற்காக அவரது கழுத்தில் கத்தி வைத்தபோது அதைத் தட்டிக்கேட்டதால் இத்தாக்குதல் நடந்துள்ளது.
இதையும் படிங்க: புரளும் பொய் வாக்குறுதிகள்... தொடரும் போராட்டங்கள்... திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை...!
இதுதான் திமுக ஆட்சியின் கீழ் உள்ள தமிழகத்தின் கவலைக்குரிய யதார்த்தம். போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்தாலும் இந்நிலை தொடர்கிறது” என்று கூறினார்.

மேலும், “போதைப்பொருட்கள் தடையின்றி கிடைப்பது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான அரசியல் பிரசாரம், கொடிய ஆயுதங்களை இளைஞர்கள் கையில் வைத்திருப்பது திமுக ஆட்சியில் இயல்பாக நடக்கும் ஒன்றாகிவிட்டது.
கட்டுக்கோப்பான மாநிலமாக இருந்த தமிழகத்தை போதைப்பொருட்களால் சீரழித்து காட்டாட்சி ராஜ்ஜியமாக மாற்றியுள்ளது திமுக அரசு. இந்தக் காட்டுமிராண்டித்தனமான ஆட்சிக்கு திமுக பொறுப்பேற்க வேண்டும்” என்று அண்ணாமலை கடுமையாகச் சாடினார்.
இச்சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களிடையே அதிகரிப்பதாகவும், புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பின்மையில் உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. திமுக அரசு இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு கூச்சமாவே இல்லையா? தேர்தல் அறிக்கை குழு!! பொளந்து கட்டும் அண்ணாமலை!