குதிரை பேரம் என்ற சொல் தமிழக அரசியலில் இன்று மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே இந்தச் சொல் அரசியல் விவாதங்களின் மையமாக உருவெடுத்து, ஆட்சி அமைத்தல் முதல் அரசைக் கவிழ்க்கும் முயற்சிகள் வரை பல நிகழ்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது வெறும் அரசியல் சொல்லாடலாக மட்டும் இல்லாமல், சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சி மாற்றங்கள், ராஜினாமாக்கள், நம்பிக்கை வாக்கெடுப்புகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஒற்றைப் பெரும்பான்மையைப் பெறாத நிலையில் ஆட்சி அமைத்தது. தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை இல்லாததால், பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் அவர்களில் சிலர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து ஆளும் கட்சியில் இணைந்தனர்.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பணம் மற்றும் பதவி வாக்குறுதிகளின் அடிப்படையில் கட்சி மாற்றங்கள் நடந்ததாகக் குற்றம் சாட்டின. ஆளும் தரப்பு இதை தலைமை மீதான அதிருப்தி மற்றும் தன்னார்வ முடிவு என்று விளக்கியது. இந்த நிகழ்வுகள் குதிரை பேரத்தின் முதல் அலையாக அரசியல் களத்தில் பேசப்பட்டன.ஆட்சி அமைந்த சில வாரங்களிலேயே நிலைமை மாறியது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரிடம் பெரும் தொகைகளை வழங்கி கட்சி மாறச் செய்யும் முயற்சிகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.
இதையும் படிங்க: சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடக்கம்... மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல்... எம்எல்ஏக்கள் மௌன அஞ்சலி..!!
ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனக்கு முப்பத்தைந்து கோடி ரூபாய் வரை வழங்குவதாகப் பேரம் நடந்ததாகக் காவல்துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆளும் தரப்பு எதிர்க்கட்சி தலைவர்களைச் சுட்டிக்காட்டியது. எதிர்க்கட்சிகள் இதை ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி என்று கூறியதுடன், தாங்களும் ஆளுநரிடம் புகார்கள் அளித்தன. ஆளுநர் இல்லம் இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் வந்துபோகும் இடமாக மாறியது. இன்றைய சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் குதிரை பெரும் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அப்போது சபாநாயகர், குதிரை பேரமும் இல்ல.. கழுதை பேரமும் இல்ல.. என்று கூறி எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: "தட்டுங்கள் திறக்கப்படும்"..! FCRA எதிர்ப்பு... முதல்வர் விஜய்க்கு பேரவையில் வன்னியரசு பாராட்டு.!