மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பங்கேற்று, அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து உரையாற்றினார். அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிவடையும் நிலையில், தவெக மற்றும் அதன் அரசியல் நடவடிக்கைகள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். ஆனால் வெற்றிபெற்ற 12 நாட்களிலேயே அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்குக் காரணம் குதிரை பேரம் என்று சுட்டிக்காட்டிய எடப்பாடி, “மக்கள் போட்ட வாக்குகளை விற்றுவிட்டார். இது நியாயமா? தர்மமா? நீதியா?” என்று கேள்வி எழுப்பினார்.
நேற்று முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டியதைப் பார்த்தேன். டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? தமிழக விவசாயிகளுக்காக அவர் என்ன செய்தார்? மக்கள் ஒருமுறை தான் ஏமாறுவார்கள். இன்னொரு முறை ஏமாற மாட்டார்கள்.
இதையும் படிங்க: நாளை மதுராந்தகத்தில் களமிறங்கும் விஜய்..!! பிரம்மாண்ட ரோடு ஷோ.. தவெக வேட்பாளருக்கு ஆதரவு!!
அந்த தவெக கட்சிக்கு ரீல்ஸ் மற்றும் ரீல் தான் முதலீடு. இதை வைத்து தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார்கள். அதுவும் மைனாரிட்டி ஆட்சி. அந்த ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத் தான் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டார்கள்.
தேர்தல் போட்டியில் உழைத்த கூட்டணிக் கட்சிகள் மற்றும் தொண்டர்களுக்கு விசுவாசம் காட்டாத அந்த நபர் மீண்டும் போட்டியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அவரைத் தோற்கடித்து தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் அவர் தவெகவில் இணைந்து அதிமுக வேட்பாளருக்கு எதிராக நிற்பது மக்களுக்குச் செய்த துரோகம் என்று குற்றம் சாட்டினார்.

“நமது பொருளை அபகரித்தவருக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும். இனி யாருக்கும் இப்படிப்பட்ட எண்ணம் வரக்கூடாது” என்று அழைப்பு விடுத்தார். ஆடு திருடினால் ஆடு திருடன், கோழி திருடினால் கோழி திருடன் என்று சொல்வது போல, எம்.எல்.ஏ. பதவியைத் திருடியவரை தோற்கடிக்க வேண்டும்.. எம்எல்ஏக்களை திருடினால் என்ன சொல்வது.. தவெக ஒரு திருட்டு சக்தி.. அதிமுக எம்எல்ஏக்களை திருடி விட்டார்கள் என்றும் தெரிவித்தார். விஜய் தலைமையிலான தவெகவை குறிப்பிட்டு, “ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியவர் விஜய். இது ஜனநாயகப் படுகொலை. யாரும் மன்னிக்க முடியாதது” என்று சாடினார்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் திறனற்ற தற்போதைய அரசைக் காப்பாற்ற இப்படிப்பட்ட இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். “விஜய் முகத்தைப் பார்த்தாலே வாக்கு விழும் என்கிறார்கள். பிறகு ஏன் வீதி வீதியாகச் செல்கிறார்?” என்று கேள்வி எழுப்பினார். மக்கள் இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து, விசுவாசமற்ற செயல்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று எடப்பாடி வலியுறுத்தினார். தாராபுரம் தொகுதியிலும் இதேபோன்ற பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்; துரோகத்தின் அடையாளம் நீங்கள்: மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!