சென்னை: அ.தி.மு.க.வின் முக்கிய திட்டமான அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், இந்த தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 60 ஆண்டுகால ஏக்கத்தை தீர்க்கும் திட்டம் என பெருமைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தால் பயனடையும் ஏழு தொகுதிகளில் ஆறு தொகுதிகளை த.வெ.க. கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே ஆறுதல் கிடைத்துள்ளது.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டி 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தையும், ஐம்பது லட்சம் விவசாயிகளையும் பயன்பெறச் செய்யும் இந்த திட்டத்துக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 1,652 கோடி ரூபாய் ஒதுக்கி நிறைவேற்றினார். கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வுக்கு நிரந்தர ஓட்டு வங்கியாக இந்த திட்டம் இருக்கும் என அக்கட்சி எதிர்பார்த்தது. 2021 தேர்தலில் இந்த ஏழு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது.
ஆனால் 2026 சட்டசபைத் தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க.வின் அலை கொங்கு மண்டலத்தையும் விட்டு வைக்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தால் நேரடியாக பயன்பெறும் தொகுதிகளில் பெருந்துறை தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது. மற்ற ஆறு தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்று அ.தி.மு.க.வை இரண்டாம் இடத்துக்கு தள்ளியது.
இதையும் படிங்க: திமுக தோற்கணும்னு ராகுல்காந்தியே ஆசைப்படுறாரு!! அதான் தமிழ்நாட்டுக்கே வரல!! கொளுத்தி போடும் அண்ணாமலை!

கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க. சார்பில் வெற்றி பெற்றார். சூலூர், கவுண்டம்பாளையம், அவிநாசி, மேட்டுப்பாளையம், திருப்பூர் வடக்கு தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க.வின் வாக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க.வின் வலிமையான கோட்டை என கருதப்பட்ட நிலையில், அத்திக்கடவு திட்டம் கூட அக்கட்சியை காப்பாற்ற முடியவில்லை. விஜய் அலையின் தாக்கம் முழுமையாக உணரப்பட்டுள்ளது. திட்டத்தால் பயன்பெறும் விவசாயிகள் மத்தியிலும் த.வெ.க.வுக்கு பெரும் ஆதரவு கிடைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வுக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில், கொங்கு மண்டல அரசியல் இனி எப்படி மாறும் என்பதை அடுத்த சில மாதங்கள் தீர்மானிக்கும். த.வெ.க.வின் இந்த வெற்றி, புதிய அரசியல் சமன்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கனவிலும் நினைச்சு பார்த்துருக்க மாட்டாரு!! தன்னால் விரட்டப்பட்டவரிடமே தோற்றுப்போன அன்பில் மகேஷ்!!!