தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்த பிறகு அதற்கு ஆதரவு அளித்த கட்சிகளுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் ஜூலை மாதம் கோவளத்தில் நடைபெற்றது. அதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
தற்போது செப்டம்பர் 9ஆம் தேதி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு தவெக அமைச்சர்கள் பல்வேறு கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்தப் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்தில் தங்களது கட்சி பங்கேற்காது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தவெகவுக்கு ஆதரவு என்பது ஆட்சி அமைப்பதற்காக மட்டுமே வழங்கப்பட்ட வெளியார் ஆதரவு என்றும், அது முறையான கூட்டணியாகக் கருதப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சுத்த வேஸ்ட்... பதிலுரையில் பதிலே இல்லையே?... சி.எம்.விஜயை வெளுத்து வாங்கிய சிபிஎம் சண்முகம்...!
தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக ஒற்றைப் பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆளுநர் ஆட்சி அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படும் சூழலைத் தவிர்க்கும் நோக்கில் இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு அளித்தன. அதே நேரத்தில் அமைச்சரவையில் இடம் பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்ற முடிவையே எடுத்தன. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை பாலகிருஷ்ணன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: குஜிலியம்பாறை விவகாரத்தில் வருத்தம் தெரிவித்தோம்! அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!