சிபிஐ, சிபிஎம் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்க முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தடை விதித்துள்ளது.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் கடந்த 17-ந் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை கொண்டு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறேன். இது மிக அவசரம். இவ்வாறு கல்லூரி கல்வி ஆணையரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருக்கலைப்புக்கு எதிராக பேசுவதா..? சபாநாயகர் கருத்துக்கு சிபிஐ வீரபாண்டியன் எதிர்ப்பு..!
முன்னதாக திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இருக்கும் சிபிஐ, சிபிஎம் கட்சியின் உறுப்பினர்கள் விவரங்களை வட்டாட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டு வட்டாட்சியர் அய்யாசாமி இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கு முன்னதாக டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது கல்லூரிகளுக்கு நுழைந்து காவல்துறையினர் மாணவர்களை கைது செய்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இடதுசாரி கட்சிகளும், தவெக கூட்டணி கட்சிகளுமான சிபிஎம், சிபிஐ கட்சிகள் சி.எம்.விஜய்க்கு தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னாச்சு? தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் மு.வீரபாண்டியன்!