காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான பார்லிமென்ட் வெளியுறவுத் துறை நிலைக்குழு, இந்தியா - வங்கதேச உறவு குறித்து சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் வங்கதேசத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றங்கள், 1971 விடுதலைப் போருக்குப் பிறகு இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மூலோபாய சவாலாக மாறியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களின் எழுச்சி, உள்நாட்டு அரசியல் மாற்றங்கள், சீனா மற்றும் பாகிஸ்தானின் அதிகரிக்கும் செல்வாக்கு ஆகியவை இந்த சவாலுக்கு முக்கிய காரணங்களாக குழு சுட்டிக்காட்டியுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி ஆட்சியை இழந்து, தடை செய்யப்பட்ட நிலையில், போட்டி சக்திகளுக்கு இடம் உருவாகியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
இளைஞர்கள் தலைமையிலான தேசியவாத உணர்வு வலுவடைந்து வருகிறது. இது இஸ்லாமிய குழுக்களுடன் இணைந்தால், இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறலாம் என்று குழு எச்சரித்துள்ளது. இந்த மாற்றங்கள் நீண்டகால அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ஆழமாக பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா நலனுக்காக சுயாட்சியை அடகுவைக்க முடியாது! ரஷ்ய அதிபர் புடினின் வருகை! சசி தரூர் விளக்கம்!

எனவே, மத்திய அரசு வங்கதேச இடைக்கால அரசுடன் நல்ல தொடர்பைப் பேண வேண்டும். அந்நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை ஆதரிக்க வேண்டும் என்று குழு ஆலோசனை வழங்கியுள்ளது. சீனாவின் உள்கட்டமைப்பு திட்டங்கள், துறைமுக விரிவாக்கம், பாகிஸ்தானுடனான நெருக்கம் ஆகியவற்றையும் குழு கவலையுடன் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கை பார்லிமென்ட்டில் டிசம்பர் 18-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. இது இந்தியாவின் அண்டை நாட்டு கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. வங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற குழுக்களின் திரும்பவருகை, அவாமி லீக்கின் தடை ஆகியவை அரசியல் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்று குழு கூறியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி கார் வெடிப்பு விவகாரம்! காஷ்மீரில் பதுங்கியிருந்த மற்றொரு பயங்கரவாதி! தட்டித்தூக்கிய போலீஸ்!