இந்தியாவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 2025-இல் தொடர்ந்து அதிகரித்து, சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி வருகின்றன. தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் (NCRB) புள்ளிவிவரங்களின்படி, 2013-ல் 33,707 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவான நிலையில், இவை கடந்த ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளன.

பெங்களூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 55% அதிகரித்துள்ளதாகவும், 1,322 வழக்குகளில் 10 பேருக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசம், டெல்லி, அரியானா போன்ற மாநிலங்களில் இவ்வழக்குகள் அதிகம் பதிவாகின்றன. குறிப்பாக, தலித் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் கவலை அளிக்கின்றன.
இதையும் படிங்க: கொல்கத்தா மாணவி பாலியல் வழக்கில் பகீர் திருப்பம்.. கிரைம் சீனில் இருந்த 4வது நபர்..!
சமீபத்தில் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் 8 வயது பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், இளம்பெண் ஒருவர் ஆம்புலன்சில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் கடந்த ஜூலை 24ம் தேதி அன்று ஊர்காவல் படை (ஹோம் கார்ட்) ஆட்சேர்ப்பு தேர்வின் போது 26 வயது பெண்மணி ஒருவர் மயக்கமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டபோது, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் அஜித் குமார் ஆகியோரால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு மையத்தில் மயங்கிய பெண்மணி, உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், வழியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பவியலாளர் ஆகியோர் அவரை பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கயா நகர காவல் கண்காணிப்பாளர் ராமானந்த் குமார் கௌஷல் தலைமையிலான காவல்துறை, இரண்டு மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தது.

இந்த வழக்கு பீகார் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் இச்சம்பவம் குறித்து பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவருக்கு உரிய மருத்துவ உதவியும், ஆலோசனையும் வழங்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இச்சம்பவம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய சிறப்பு சட்டம் கொண்டு வரப்படுகிறது. இருப்பினும், புகார்களைப் பதிவு செய்ய காவல்துறையின் தயக்கம், சமூக மற்றும் குடும்ப அழுத்தங்கள் ஆகியவை நீதி கிடைப்பதில் தடைகளாக உள்ளன. பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வலுப்படுத்துவது இக்குற்றங்களைக் குறைக்க உதவும் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: தப்பிச்சிரலாம்னு நினைக்காதீங்க.. ஆதாரம் இருக்கு! தேர்தல் ஆணையத்தை அலற விட்ட ராகுல்காந்தி!!