தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்பதை அறிவிப்பதில் சில காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று பாஜக சார்பில் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல முக்கிய நட்சத்திர வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன், அவிநாசி தொகுதியில் எல். முருகன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர். காந்தி, மொடக்குறிச்சி தொகுதியில் கிருத்திகா சிவக்குமார் உள்ளிட்டோர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.

இந்த வேட்பாளர் பட்டியலில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு இடம் அளிக்கப்படவில்லை. இது குறித்து அவரிடம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கட்சித் தலைமைக்கு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக தெரிவித்துவிட்டேன். மாநில கோர் கமிட்டி கூட்டத்தில் இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்ற எனது கருத்தை தெளிவாகச் சொல்லியிருந்தேன்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டதா..?? கட்சியில் பாரபட்சம் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் பளீச் பதில்..!!
அந்தக் கூட்டத்தில் இருந்து தலைமைக்கு அனுப்பப்பட்ட பட்டியலிலும் எனது பெயர் இடம்பெறவில்லை. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடமும் ஒரு வாரத்துக்கு முன்பு இதே கருத்தைத் தெரிவித்திருந்தேன்” என்றார். மேலும் அவர் கூறுகையில், “கட்சி எனது கருத்துக்கு மதிப்பளித்து, என்னை பிரசாரப் பணிக்கு பயன்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் இந்தத் தேர்தலில் 27 பாஜக வேட்பாளர்கள் மட்டுமின்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் நான் பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராகச் சென்று தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.

கட்சியின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதே எனது கடமை என்று கருதுகிறேன். எப்போதும் நான் வேட்பாளர் பந்தயத்தில் இருந்ததில்லை. எந்தத் தொகுதியையும் நான் கேட்கவில்லை, கேட்கவும் மாட்டேன். அது எனது பழக்கமும் அல்ல” என்று தெரிவித்தார். அண்ணாமலை மேலும் கூறியதாவது: “ஏப்ரல் 21-ம் தேதி வரை தீவிரமாக பிரசாரம் செய்வதே எனது பணி. அதன் பிறகு மற்ற விஷயங்கள் குறித்து பேசலாம். இந்தத் தேர்தலில் எனது சண்டை என்பது தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வதாகவே இருக்கும்.
திமுக அரசின் தவறுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, வலிமையாகப் பேசுவது எனது பொறுப்பு என்று நினைக்கிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பல வேட்பாளர்களை நம்பி களமிறக்கினோம். ஆனால் அவர்களுக்காக தீவிர பிரசாரம் செய்ய முடியவில்லை என்ற சிறு வருத்தம் இருந்தது. அந்த மனக்குறையை இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் நீக்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. காலம் இருக்கிறது. பல தேர்தல்கள் வர உள்ளன. அப்போது போட்டியிடலாம். நம்முடன் அன்போடு இருக்கும் மக்கள் எப்போதும் நம்முடன் அன்போடுதான் இருப்பார்கள்” என்றார்.
இதையும் படிங்க: பரபரக்கும் தேர்தல் களம்: முரண்டு பிடிக்கும் அண்ணாமலை..!! கூட்டத்தில் பங்கேற்க அழைக்கும் பாஜக..!!