தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் (MLA) திருமதி சௌமியா அன்புமணி அவர்கள், தருமபுரி நகரையொட்டி ஓடும் சனத்குமார் நதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அண்ணசாகரம், பாரதிபுரம், ஏமகுட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு, பிளாஸ்டிக் கழிவுகளுடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசி வரும் நிலையில், அதனைச் சீரமைப்பது குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் அவர் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
நாம் இப்போது சனத்குமார் நதி ஓடும் இடத்தில்தான் நிற்கிறோம், ஆனால் இங்கே நதியே இல்லை என்பதுதான் இன்றைய நிதர்சனம். நதி என்றால் அகலமாகவும், ஆழமாகவும் இருக்க வேண்டும். வத்தல்மலையில் இருந்து வரும் மழை வெள்ளம் இந்த நதி வழியாகத்தான் தென்பெண்ணை ஆற்றில் துணை நதியாகக் கலக்கிறது. ஒரு காலத்தில் மக்கள் இதில் குளித்து, துணி துவைத்து, குடிநீராகப் பயன்படுத்தினர். இதன் மூலம் கரும்பு, நெல் போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து விவசாயமும் செழிப்பாக இருந்தது. ஆனால் இன்று இது ஒரு குளம் போலக் காட்சியளிக்கிறது.

தொடர்ந்து பேசிய அவர், தற்பொழுது 4 கிலோமீட்டர் தூரத்திற்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுச் சுத்தம் செய்யப்பட்டு வந்தாலும், நகர்ப் பகுதிக்கு அருகில் இருப்பதால் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டுத் துர்நாற்றம் வீசுகிறது என்றார். இப்பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் தற்பொழுது 40 விழுக்காடு நிறைவடைந்துள்ளது என்றும், இத்திட்டம் முழுமையாக முடிந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு நதியில் கலக்கும் போது இந்தத் துர்நாற்றப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்த நதியைச் சுத்தம் செய்தல், பராமரித்தல், கழிவுகள் கலக்காமல் பாதுகாத்தல் ஆகிய மூன்றையும் போர்க்கால அடிப்படையில் அரசு செய்ய வேண்டும் என்றும், இதற்குரிய நிதியை ஒதுக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்த கூட்டு ஆய்வு என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் கூட்டாக குரல் எழுப்புவோம்! மேகதாது அணைக்கு எதிராக களம் புகுந்த சவுமியா அன்புமணி!
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அணை கட்டக்கூடாது என்பதுதான் நமது இறுதி முடிவு. கர்நாடக அரசுக்கு இது வாக்கு அரசியலாக இருக்கலாம், ஆனால் நமக்கு இது வாழ்வாதாரப் பிரச்சினை. அணை கட்டுவதைத் தடுக்க டெல்லி வரை சென்று போராடவும் நாம் தீவிரமாக இருக்கிறோம்.
நமது சட்டமன்றத்தில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது மிகுந்த பெருமையாக இருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இரண்டு முறை இசைக்கப்பட்டது நமக்குப் பெருமைதான். தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாடலாம், அது மிகவும் வரவேற்கத்தக்கது" என்று சௌமியா அன்புமணி எல்.எல்.ஏ தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் கூட்டாக குரல் எழுப்புவோம்! மேகதாது அணைக்கு எதிராக களம் புகுந்த சவுமியா அன்புமணி!