தமிழகத்தில் முட்டை விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.6.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 55 ஆண்டு கால தமிழ்நாடு கோழிப் பண்ணை வரலாற்றில், முட்டை விலை இந்த அளவை எட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் முட்டை விலை ஒட்டுமொத்தமாக 25 காசுகள் வரை உயர்ந்துள்ளது. பண்ணைக் கொள்முதல் விலை ரூ.6.70-லிருந்து 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.6.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) இன்று (ஜூலை 14, 2026) மாலை அறிவித்துள்ளது. இந்த புதிய விலையானது நாளை (ஜூலை 15, 2026) காலை முதல் அமலுக்கு வருகிறது. பண்ணைக் கொள்முதல் விலையே ரூ.6.75 ஆக உயர்ந்துள்ளதால், சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு முட்டையின் விலை 7 ரூபாயைக் கடந்து விற்பனையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது முட்டையின் நுகர்வும், சந்தையில் அதன் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டைத் தவிர்த்து இந்தியாவின் பிற முக்கிய மண்டலங்களிலும் முட்டை விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. மேலும், கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனங்களின் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால் வரும் நாட்களிலும் முட்டை விலை மேலும் உயரக்கூடும் என்று பண்ணையாளர்கள் கணித்துள்ளனர்.
இதையும் படிங்க: Eggetarian-களுக்கு ஷாக்கோ ஷாக்.. எகிறிய முட்டை விலை..!! இன்று முதல் அமல்..!!
தமிழகத்தின் முட்டை உற்பத்தி மையமாகத் திகழும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு முட்டைகள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அனுப்பப்படுகின்றன. மேலும், தற்போது நாளொன்றுக்கு 1 கோடி முட்டைகள் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இவை போக, தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்குத் தேவையான முட்டைகள் வழங்கப்பட்ட பின்னர், மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற மாவட்டங்களின் சில்லறை விற்பனைக்காக அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முட்டை பிரியர்களுக்கு ஷாக்..!! நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிரடி உயர்வு..!!