அதிமுகவில் ஜெயலலிதா இறந்தவுடன், முதல்வர் பொறுப்பில் அமர்ந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவி ஏற்றவுடன், ஓபிஎஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்களை கட்சியில் இருந்து நீக்கினார். இவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு வைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தனது 52 ஆண்டுகால அதிமுக பயணத்தை முடித்துக்கொண்ட செங்கோட்டையனுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. த.வெ.க நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கான அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கோட்டையன் மட்டுமின்றி திருப்பூர் முன்னாள் எம்.பி. சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்த கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌனீஸ்வரன் பி முத்துசாமி அத்தாணி பேரூர் கழக செயலாளராக இருந்த ரமேஷ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்துள்ளனர்.
இதையும் படிங்க: “உடனே புறப்பட்டு வாங்க...” - அமித் ஷாவிடம் இருந்து வந்த அழைப்பு... திடீரென நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்...!
தமிழக அரசியலில் தற்போது பரபரப்பைக் கிளப்பி வரும் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செங்கோட்டையன் சென்றதால் அதிமுக - பாஜக கூட்டணிக்கு எந்த பின்னடைவும் இல்லை என கருத்து தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் சொந்த முடிவு இது. 50 வருட அரசியல் அனுபவம் கொண்டவர். அவர் எடுத்த முடிவு பற்றி விமர்சிப்பது சரியாக இருக்காது எனக்கூறினார்.
அதிமுக ஏற்கனவே பல சிக்கல்களை சந்தித்துள்ளது. அப்படித்தான், கடைசியாக ஏற்பட்ட சலசலப்பின் போது தமிழகத்தில் ஒரு நல்லாட்சி தொடர வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி அளித்த ஆதரவில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தார். இப்போது தேர்தல் சமயத்தில் மீண்டும் அப்படியொரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுடைய கூட்டணிக்கு எந்த பின்னடைவும் நிச்சயமாக வராது.
பாஜக தான் தன்னை அனுப்பியதாக முதலில் சொன்னவர் செங்கோட்டையன், பின்னர் அவரே அதை மாற்றி சொன்னார். எனவே, இப்போது அவர் தவெகவுக்கு போனது பற்றி நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றார்.
இதையும் படிங்க: "என்னய்யா நடக்குது தமிழகத்துல..." - ஒரே நாளில் 4 பாலியல் பலாத்காரம், 8 கொலைகள்... கொந்தளித்த நயினார்...!