தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் 500 ஏக்கர் பரப்பளவில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில், தவெக தலைவர் விஜய் 35 நிமிட உரையில் திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவின் முதன்மை இலக்கை உறுதிப்படுத்தினார்.

விஜய், “தவெக ஒரு மாற்று சக்தி அல்ல, முதன்மை சக்தி” என்று கூறி, “2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேயே போட்டி” என அறிவித்தார். “மை டியர் ஸ்டாலின் அங்கிள், மக்கள் நலனுக்காக திமுக போராடவில்லை” என விமர்சித்த அவர், ஊழல் ஆட்சியை வீழ்த்துவோம் என முழங்கினார். பாஜகவை “கொள்கை எதிரி” எனவும், திமுகவை “அரசியல் எதிரி” எனவும் வரையறுத்தார்.
இதையும் படிங்க: அறியாமையில் பேசுகிறார் விஜய்.. உடனடியாக ரியாக்ட் செய்த எடப்பாடி பழனிசாமி..!!
“சிங்கம் வேட்டையாடத்தான் வரும், வேடிக்கை பார்க்க வராது” என உருக்கமாகப் பேசிய விஜய், எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்தை புகழ்ந்து, அவர்களது மக்கள் நலப் பணிகளை தொடர்வதாக உறுதியளித்தார். மக்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கான நல்லாட்சி அமைப்பதே தவெகவின் குறிக்கோள் என வலியுறுத்தினார்.
இந்நிலையில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று திருநெல்வேலியில் நடந்த பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வந்த சரத்குமார், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, விஜய்யின் மதுரை தவெக மாநாட்டுப் பேச்சு குறித்து கருத்து தெரிவித்தார்.
விஜய், தவெக மாநாட்டில் பாஜகவை "பாசிசம்" என்று விமர்சித்து, பிரதமர் மோடியை "மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்" என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த சரத்குமார், "விஜய்க்கு பாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா? அவர் இன்னும் அரசியலில் வளரவில்லை. பிரதமரை இப்படி அழைக்கும் அளவுக்கு அவருக்கு அரசியல் புரிதல் இல்லை. எதை, எங்கு, யாரைப் பற்றி பேசுகிறோம் என்பதில் கவனம் தேவை" என்று கூறினார்.
மேலும், விஜய் உண்மைகளை அறிந்து, புள்ளிவிவரங்களுடன் பேசியிருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். சரத்குமார், விஜய்யின் பேச்சு ஆரோக்கியமான விமர்சனமாக இல்லாமல், மரியாதைக் குறைவாக இருப்பதாகவும் கண்டித்தார். "நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன், ஆனால் பேச்சில் மரியாதையும், கொள்கைத் தெளிவும் தேவை" என்று அவர் வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 24ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் இதுகுறித்து விரிவாகப் பேசுவேன் என்றும் அவர் தெரிவித்தார். விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சரத்குமாரின் இந்த விமர்சனம் மேலும் கவனம் பெற்றுள்ளது. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விஜய் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், சரத்குமாரின் பதிலடி அரசியல் விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாநாட்டில் அரங்கம் அதிர பேசிய விஜய்.. நடுவில் சொன்ன குட்டி ஸ்டோரி இதுதான்..!!