சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் மீண்டும் இணைய முடிவு செய்துள்ள பா.ஜனதா, கடந்த முறை பெற்ற 20 தொகுதிகளைவிட இரு மடங்குக்கும் அதிகமாக 45 தொகுதிகளை கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் அ.தி.மு.க.வுக்கும் பா.ஜனதாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை சூடு பிடித்துள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது. அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கூட்டணியை விட்டு வெளியேறிய பா.ஜனதா, தனி அணி அமைத்து போட்டியிட்டது.
அந்தத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகளில் 81 இடங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்து அ.தி.மு.க.வை பின்னுக்குத் தள்ளியது. இந்த வெற்றிகரமான செயல்திறன்தான் தற்போது பா.ஜனதாவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: 12 சீட்டுக்கு பேரம்!! பழனிசாமிக்கு வாசன் போடும் கண்டிஷன்! பாஜகவை கை காட்டும் எடப்பாடி!
இந்த 81 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளவற்றை பா.ஜனதா தனியாக பட்டியலிட்டு வைத்துள்ளது. அதில் இருந்து குறைந்தது 45 தொகுதிகளையாவது கேட்டுப் பெற வேண்டும் என்று உறுதியாக உள்ளது. ஆனால் அ.தி.மு.க. தரப்பில் “கடந்த முறை கொடுத்த 20 தொகுதிகளைத்தான் இப்போதும் கொடுக்க முடியும்” என்று ஆரம்பத்தில் தெரிவித்தது.
பா.ஜனதா தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால், அதிகபட்சம் 24 தொகுதிகள் வரை தரலாம் என்று அ.தி.மு.க. மனநிலை மாற்றியுள்ளது. இருப்பினும் 45 தொகுதிகள் என்ற பா.ஜனதாவின் எண்ணிக்கையில் எந்த சமரசமும் செய்துகொள்ள பா.ஜனதா தயாராக இல்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அ.தி.மு.க. தரப்பில் ஒரு புதிய நிபந்தனையை முன்வைத்துள்ளது. பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் கூட்டணியில் இணைந்தால், அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளை கழித்த பிறகுதான் பா.ஜனதாவுக்கு இறுதி எண்ணிக்கை முடிவு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.
பா.ஜனதா நிர்வாகி ஒருவர் இது குறித்து பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் வளர்ச்சி அனைவருக்கும் தெரியும். 81 சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ளோம். எனவே கூடுதல் தொகுதிகள் கேட்பதில் எந்த தவறும் இல்லை. அ.தி.மு.க. தலைமையும் இதை உணர்ந்துதான் பேச்சுவார்த்தையை தொடர்கிறது” என்று கூறினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் தைப்பொங்கலுக்கு முன்பாக கூட்டணியையும் தொகுதிப் பங்கீட்டையும் இறுதி செய்ய விரும்புகிறார். அதற்கேற்ப பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பா.ஜனதாவின் 45 தொகுதி கோரிக்கையும், அ.தி.மு.க.வின் 24 வரை என்ற எல்லையும் இடையே பெரும் இழுபறி நீடிப்பதால், கூட்டணி உறுதியானாலும் தொகுதிப் பங்கீடு இழுபறி நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.
தமிழக அரசியலில் பா.ஜனதாவின் இந்த அதிரடி நகர்வு, அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தி தங்களை வலுவான சக்தியாக நிலைநிறுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 12 சீட்டுக்கு பேரம்!! பழனிசாமிக்கு வாசன் போடும் கண்டிஷன்! பாஜகவை கை காட்டும் எடப்பாடி!