உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎம்டபிள்யூ, ஜெர்மனியில் 2027-ஆம் ஆண்டுக்குள் சுமார் 8,000 ஊழியர்களை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. மின்சார வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி, உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக சவால்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறை தற்போது மிகப்பெரிய மாற்றக் கட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக மின்சார வாகனங்களுக்கான முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி செலவுகள் உயர்ந்துள்ளன. அதே நேரத்தில், சீன நிறுவனங்களின் போட்டி மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு போன்ற காரணிகளும் ஐரோப்பிய கார் நிறுவனங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த சூழலில், ஜெர்மனியை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களான வோக்ஸ்வேகன் மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஏற்கனவே செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனமும் பணியாளர் குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம்! ஒரே நாளில் சரிந்த கச்சா எண்ணெய் விலை! உலக பொருளாதாரத்திற்கு நிம்மதி!

முனிச் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், ஜெர்மனியில் உள்ள பணியாளர்களில் சுமார் 8,000 பேரை குறைக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நிறுவன நிர்வாகத்திற்கும் தொழிலாளர் நல அமைப்புகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிர்வாகப் பிரிவு மற்றும் ஆராய்ச்சி - மேம்பாட்டு துறைகளில் பணியாளர் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், உற்பத்திப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மின்சார வாகனங்களுக்கான உலகளாவிய போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், பாரம்பரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது செலவுகளை குறைத்து புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யும் கட்டாயத்தில் உள்ளன. இதன் தாக்கமாகவே பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையான முடிவுகளை எடுத்து வருவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட உள்ள நிலையில், நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் செலவு குறைப்பு நடவடிக்கைகள் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் பார் ஒப்பந்தத்தில் இனி பழைய ஆதிக்கம் இருக்காது! புதியவர்களுக்கு கதவு திறந்த தவெக அரசு!