சென்னை: தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம், தற்போது மகாராஷ்டிராவில் அதைவிட பெரிய அளவில் புதிய கப்பல் கட்டும் திட்டத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், தூத்துக்குடியில் அறிவிக்கப்பட்ட ₹15,000 கோடி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
மசகான் டாக் நிறுவனம் கடந்த 2025 செப்டம்பரில் தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான Guidance Tamil Nadu உடன் தூத்துக்குடியில் கிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் பசுமைத் தள கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தத் திட்டத்துக்கான முதலீடு சுமார் ₹15,000 கோடி என அறிவிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் மசகான் டாக் மட்டுமின்றி, கொச்சின் ஷிப்பியார்டு நிறுவனமும் தனியாக ₹15,000 கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் திட்டத்தை அமைக்க ஒப்பந்தம் செய்திருந்தது. இரு திட்டங்களும் சேர்ந்து சுமார் ₹30,000 கோடி முதலீடு மற்றும் ஆயிரக்கணக்கான நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அப்போது தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு! உப்பளங்களில் கருப்புக்கொடி ஏந்தி தொழிலாளர்கள் போராட்டம்!
ஆனால், மசகான் டாக் நிறுவனத்தின் தூத்துக்குடி திட்டத்தில் இதுவரை முக்கிய கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. நிலம் ஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறை நடவடிக்கைகள் காரணமாக திட்டம் தாமதமாகி வருவதாக முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன. நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டம் தொடர்பாக ஆந்திரப் பிரதேசத்திலும் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக செய்திகள் வெளியாகியதால், திட்டம் வேறு மாநிலத்துக்கு செல்லுமா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த சூழலில், மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள திகி துறைமுகத்தில் மிகப்பெரிய கப்பல் கட்டும் கிளஸ்டரை உருவாக்க மசகான் டாக் நிறுவனம் புதிய MoU-வில் கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான முதலீடு சுமார் ₹27,000 கோடி என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு குறைந்தது 20 லட்சம் Gross Tonnes அளவிலான கப்பல் கட்டும் திறனை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. போர்க்கப்பல்கள் மட்டுமின்றி வர்த்தகக் கப்பல்கள், கப்பல் பழுதுபார்ப்பு, மறுசுழற்சி உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. சுமார் 15,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 75,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாகும் என மகாராஷ்டிரா தரப்பு தெரிவித்துள்ளது.
இதனால், “தூத்துக்குடி திட்டம் என்ன ஆனது?” என்ற கேள்வி தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருப்பினும், மசகான் டாக் நிறுவனம் தமிழக திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துவிட்டதாக இதுவரை தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, மகாராஷ்டிராவில் புதிய ₹27,000 கோடி திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதை வைத்து மட்டும் தூத்துக்குடி திட்டம் முழுமையாக கைவிடப்பட்டதாக முடிவு செய்வது அவசரமாகிவிடும்.
அதே நேரத்தில், தூத்துக்குடியில் நிலம் மற்றும் பிற நடைமுறை நடவடிக்கைகள் விரைவாக முடிக்கப்படாவிட்டால், மிகப்பெரிய தொழில் முதலீட்டுக்கான போட்டியில் தமிழகம் பின்னடைவை சந்திக்கக்கூடும் என்ற விவாதமும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி ‘துப்பாக்கி செல்வம்’ வெட்டிக்கொலை! தோட்டத்தில் நடந்த பயங்கரம்... போலீஸ் தீவிர விசாரணை