மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். சொந்த மண்ணில் வழிபாட்டு உரிமைக்காகக் கையேந்தும் நிலை ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் மகா குடமுழுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.தமிழரின் வரலாறு, பண்பாடு, கலை, கட்டடக்கலை மற்றும் சைவ மரபின் பெரும் அடையாளமாகத் திகழும் இத்திருக்கோயிலின் குடமுழுக்கு நிகழ்வில் தமிழ்ச் சமய மரபுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்பட வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கை வெறும் மொழி உணர்வு சார்ந்த ஒன்றல்ல என்றும், தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட தமிழ்ச் சைவப் பக்தி இலக்கியங்கள் பல நூற்றாண்டுகளாகத் தமிழரின் இறைநெறியோடு பின்னிப் பிணைந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளில் நமது தமிழ் மரபு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இவ்விவகாரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சமஸ்கிருத வேதங்கள் ஓதப்படும் இடங்களிலேயே தமிழ்த் திருமுறை ஓதுவார்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், குடமுழுக்கின் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் அவர்கள் தமிழ்த் திருமுறைகள் மற்றும் சைவ மந்திரங்களை ஓத அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதை அவர் நினைவுபடுத்தினார். செப்டம்பர் 9ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கடந்த காலங்களில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்குகளில் தமிழ் மந்திரங்களை ஓதிய ஓதுவார்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் இம்முறையும் உறுதி செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.எனவே கருவறை வழிபாடு, யாகசாலை நிகழ்வுகள், கோபுரக் கலச நன்னீராட்டு உள்ளிட்ட குடமுழுக்கின் முக்கியத் தருணங்களில் தமிழ் ஓதுவார்களின் பங்களிப்பு வெறும் பெயரளவில் இல்லாமல் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள வகையில் நடைமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மாணவன் தமிழ்செல்வன் மரணம்... அத்துமீறும் காவல் துறை..! வேல் முருகன் எதிர்ப்பு..!!
நமது தாய்மொழியின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதற்கு நீதிமன்றத்தின் கதவைத் தட்ட வேண்டிய சூழல் இனியும் நீடிக்கக் கூடாது என்றும், கோயில்களின் வழிபாட்டு மரபுகளில் தமிழுக்கு வழங்கப்பட வேண்டிய இடம் குறித்து அரசு தெளிவான நிரந்தர நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.தமிழில் இறைவனைப் போற்றிய நாயன்மார்களின் பக்திப் பாரம்பரியம் வாழும் மண்ணில் தமிழ்த் திருமுறைகள் ஒலிப்பது எந்த வகையிலும் புறக்கணிக்கப்படக் கூடிய ஒன்றல்ல என அவர் வலியுறுத்தினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைய வேண்டுமானால் சடங்குகள் முறையாக நடைபெறுவதோடு மட்டுமல்லாமல் தமிழ்ச் சைவ மரபின் குரலும் அதில் முழுமையாக ஒலிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எண்ணெய் வேட்டை..! ஆபத்தில் மீனவர்கள்... எச்சரிக்கும் வேல்முருகன்.!!