ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதி இந்திய ராணுவனத்தினர் போல் சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 பேர் இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ஃபோர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. இதன் காரணமாக பயங்கரவாதிகளுக்கு இடம் அளிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா துரிதப்படுத்தியது.


இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் தான் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் இந்தியாவின் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) கான்ஸ்டபிள் பூர்ணம் குமார் ஷா ('சாஹு' என்றும் அழைக்கப்படுகிறார்.
இதையும் படிங்க: இந்தியா - பாக்., போரை நிறுத்தியதே நான் தான்.. மார் தட்டிக்கொள்ளும் ட்ரம்ப்.. புகையும் சர்வதேச அரசியல்..!

182வது பிஎஸ்எஃப் பட்டாலியனைச் சேர்ந்த இவர் கடந்த 23ம் தேதி மதியம் பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் அருகே எல்லை வேலிக்கு அப்பால் நிலத்தை பயிரிட்டுக் கொண்டிருந்த விவசாயிகளுடன் சென்று கொண்டிருந்தார். இந்த முக்கியமான பகுதியில் தங்கள் வயல்களில் வேலை செய்ய அனுமதி பெற்ற உள்ளூர் விவசாயிகளை BSF வீரர்கள் அழைத்துச் செல்லும் வழக்கமான நடைமுறை இது. அப்போது சாஹூ எல்லை பாதுக்காப்பு படையினரின் சீருடையில் இருந்துள்ளார். அவரிடம் துப்பாக்கியும் இருந்துள்ளது. வழக்கமான பணி நடவடிக்கையின் போது, சாஹு கவனக்குறைவாக இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

அவர் பாகிஸ்தான் எல்லைக்குள் எப்படி சென்றார் என்பது தெரியவில்லை. தற்போது கோடை காலம் என்பதால் எல்லைப்பகுதிகளில் ஓடும் ஆறுகள் வறண்டதால் தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.மேலும் நிழலுக்காக விவசாயிகளுடன் ஒதுங்கியபோது எல்லை தாண்டியதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட சாஹூவை பாதுகாப்பாக மீட்பது குறித்து இந்தியா-பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு இடையே கொடிக் கூட்டம் எனப்படும் flag meetings நடைபெற்றது. அப்போது நடைபெற்று கொண்டிருந்த போர் பதற்றம் காரணமாக இந்திய பாதுகாப்பு படை வீரர் சாஹூவை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தானிடம் சாஹு காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, அவரது மனைவி ரஜினி சாஹு, தனது கணவரின் விடுதலையைப் பெற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நாடினார். கான்ஸ்டபிள் சாஹூ, மேற்கு வங்காளத்தின் ரிஷ்ராவைச் சேர்ந்தவர். தனது கணவரின் நிலைமை குறித்து மூத்த பிஎஸ்எஃப் அதிகாரிகளைச் சந்திக்க ரஜினி சாஹு ஃபெரோஸ்பூருக்கும் பயணம் செய்திருந்தார்.
தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வந்த நிலையில் எல்லையில் அமைதி நிலவ துவங்கி உள்ளது. காஷ்மீர் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் 3 வாரங்களுக்கு பிறகு புதன்கிழமை காலை 10.30 மணியளவில் பஞ்சாபில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் சாஹூவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் திரும்ப ஒப்படைத்தனர். அதேபோல் இந்தியாவால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் வீரரையும் இந்திய ராணுவம் ஒப்படைத்தது.
இதையும் படிங்க: இந்தியா-பாக். பதற்றம்: நாடாளுமன்ற குழுவிடம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி 19ம் தேதி விளக்கம்..!