பெருமாளை இழிவுபடுத்தியதாக நடிகர் சந்தானம் மீது இந்து முன்னணி கோவை போலீஸில் புகார் அளித்துள்ளது.
சந்தானம் நடித்து வெளி வர உள்ள 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தில் பெருமாள் பற்றிய பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஜனசேனா கட்சி சந்தானம், படத் தயாரிப்பு நிறுவனம் மீது போலீஸில் புகார் அளித்துள்ளது. இந்நிலையில் கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.தசரதன், செய்தித் தொடர்பாளர் சி.தனபால் உள்ளிட்டோர், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.

அதில், “இன்று காலை நாங்கள் இணையதளத்தை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது யூடியூப்பில் உள்ள ஒரு லிங்க்கில் திரைப்பட நடிகர் சந்தானம் நடித்த ஒரு படத்தின் பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. அந்தப் பாடலில், இந்து மக்கள் வணங்கும் வெங்கடேச பெருமாளின் பாடல் கேலி, கிண்டல் செய்து பாடப்பட்டு இருந்தது. இது இந்து மதத்தின் மீதும், இந்து தெய்வத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்ட எங்களுடைய மனதைப் புண்படும்படியாகவும், இந்து மக்கள் வணங்கும் பெருமாளை இழிவுபடுத்தும் வகையிலும் இருந்தது.

இந்து மக்களின் பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலும், இந்தப் பாடல் உள்ளது. எனவே, இந்து மதத்தையும், இந்து மதக் கடவுளான பெருமாளையும் இழிவுபடுத்தி பாடல் வெளியிட்ட திரைப்பட நடிகர் சந்தானம், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பாடல் சர்ச்சைக் குறித்து சந்தானம் ஏற்கனவே விளக்கம் அளிக்கையில், “நான் பெருமாள் பக்தர். கடவுள் பாடல் வைக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அந்தப் பாடலை வைத்தேன். அதில் கிண்டல் செய்யவில்லை. எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளது. பெருமாளை எனக்கும் பிடிக்கும்” என்று சந்தானம் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: அவருக்கு சமமா என் ஃபோட்டோவா? கத்தியை கையில் எடுத்த புஸ்ஸி ஆனந்த்... என்ன செய்தார் தெரியுமா?
இதையும் படிங்க: சேப்பாக்கம் மைதானம் வெடித்து சிதறும்... போலீசுக்கு பறந்த மிரட்டல் மெயில்