காவிரி விவகாரம் உச்சக்கட்டம்! தமிழக அரசின் அவசர மனு மீது 13ல் விசாரணை
சென்னை: கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த அவசர மனு, உச்சநீதிமன்றத்தில் வரும் 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது. காவிரி நீர் தொடர்பான பிரச்னை மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழகத்திற்கு ஜூலை 29ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி காவிரி நீரை திறக்க வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை உடனடியாக திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளது. தற்போதைய நீராண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான நீர்வரத்து இருந்தும், நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா முறையாக செயல்படுத்தவில்லை என தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?
கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி., காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு கோரியுள்ளது.

மேலும், இந்த நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைவதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரியுள்ளது.
பிலிகுண்டுலுவில் உரிய அளவு நீர்வரத்து இருப்பதை உறுதி செய்ய கர்நாடக அரசுக்கு தொடர்ந்து தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி உரிய நீரை திறக்க கர்நாடகா மறுத்ததாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த சூழலில், தமிழக அரசின் அவசர மனு மீதான உச்சநீதிமன்ற விசாரணை வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய விசாரணையில் கர்நாடகாவுக்கு காவிரி நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'முதல்வர் விஜயின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை'! காவிரி நீர்வரத்து அதிகரித்த நிலையில் அமைச்சர் கீர்த்தனா உருக்கம்!