இந்தியாவில் வரும் 2027-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள, நாட்டின் முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்காக மத்திய அரசு சுமார் ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு, கணக்கெடுப்புப் பணிகளைத் திறம்பட நடத்துவதற்கும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2021-ஆம் ஆண்டே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியிருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களால் தாமதமான நிலையில், இப்போது 2027-இல் டிஜிட்டல் முறையில் இந்த மாபெரும் பணி நடைபெற உள்ளது.
ஒதுக்கப்பட்ட இந்த நிதி, நாடு முழுவதும் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வது, களப்பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது, செல்போன் செயலி மூலம் தரவுகள் சேகரிப்பு, அவற்றைச் சேமித்து வைத்துப் பகுப்பாய்வு செய்தல் உள்ளிட்ட டிஜிட்டல் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும்.
இதையும் படிங்க: ஆழ்கடலை ஆளப்போகும் இந்தியா! 'மத்ஸ்யா 6000' நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகம்! - மத்திய அமைச்சர் பெருமிதம்!
2026-இல் வீடுகளின் பட்டியல் மற்றும் வரைபடமும், அதைத் தொடர்ந்து 2027-இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் நடைபெறும் நிலையில், இந்த மிகப் பெரிய செலவினம் அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தை உறுதி செய்யும்.
சமீபத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அறிவித்தபடி, இந்த முறை பட்டியல் இனத்தவர் மட்டுமின்றி அனைத்துச் சமூகங்களின் சாதிக் கணக்கெடுப்பும் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டிஜிட்டல் முறை மூலம், தரவுப் பிழைகள் குறைவதுடன், கணக்கெடுப்பு முடிவுகள் 6 முதல் 9 மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு, நாட்டின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் போன்ற முக்கிய முடிவுகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உலக அரங்கில் தீபாவளிக்கு கிடைத்த பெருமை! இந்தியாவுக்கு UNESCOஅங்கீகாரம்! பிரதமர் மோடி மகிழ்ச்சி!