லடாக் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் விடுதலை செய்யப்பட உள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் அவர் மீது விதிக்கப்பட்டிருந்த காவல் உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் சுமார் ஆறு மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாங்சுக் விரைவில் விடுதலையாகிறார்.
2025 செப்டம்பர் 24-ஆம் தேதி லடாக்கின் தலைநகர் லேயில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். அப்போது நான்கு பேர் உயிரிழந்தனர்; 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறைக்கு வாங்சுக்தான் முதன்மைக் காரணம் என்றும், இளைஞர்களைத் தூண்டிவிட்டு அமைதியைக் குலைத்ததாகவும் அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

மேலும், பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகவும் லடாக் காவல்துறை குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, லே மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் என்எஸ்ஏ பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, ராஜஸ்தானின் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் கைது சட்டவிரோதமானது எனக் கூறி வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. அங்க்மோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: மக்களே பயப்படாதீங்க..!! கேஸ் சிலிண்டர் சப்ளையில் தடை இருக்காது..!! மத்திய அரசு உறுதி..!!
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதே, மத்திய அரசு தற்போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி காவல் உத்தரவை ரத்து செய்துள்ளது. உள்துறை அமைச்சக அறிக்கையில், “லடாக்கில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் மத்திய அரசு விரும்புகிறது. இதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாங்சுக் என்எஸ்ஏ காவலின் சுமார் பாதி காலத்தை ஏற்கனவே கழித்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லடாக்கின் பிரபலமான கல்வியாளரான சோனம் வாங்சுக், பல ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்ற எதிர்ப்பு இயக்கங்கள், பழங்குடியின மக்களின் உரிமைகள் ஆகியவற்றுக்காகப் போராடி வருகிறார். 2009-இல் வெளியான ‘3 இடியட்ஸ்’ (தமிழில் ‘நண்பன்’) திரைப்படத்தில் அமீர் கான் நடித்த கதாபாத்திரம் ‘ரஞ்ச்சோ’ (பசபுகழ்), அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக பரவலாகக் கருதப்படுகிறது. அந்தப் படத்தில் காட்டப்படும் போலியான கல்வி முறைக்கு எதிரான போராட்டம், வாங்சுக் லடாக்கில் நடத்தி வரும் செயல்முறை அடிப்படையிலான பள்ளியுடன் ஒத்துப்போகிறது.

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, அரசியலமைப்பின் 6-வது அட்டவணைப் பாதுகாப்பு, பழங்குடியின மக்களின் நில உரிமைகள், வேலைவாய்ப்பு உத்தரவாதம், பாராளுமன்ற தொகுதிகள் உருவாக்கம் ஆகியவை வாங்சுக் தலைமையிலான இயக்கத்தின் முக்கியக் கோரிக்கைகளாக உள்ளன. ஆனால் மத்திய அரசு இவற்றை வழங்க மறுத்து வருவதால், கடந்த சில ஆண்டுகளாக அமைதியான போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், அவரது விடுதலை லடாக் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது பிராந்தியத்தில் உரையாடல் மற்றும் அமைதியான தீர்வுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் சப்ளை.. 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு..!! அதிரடி காட்டிய மத்திய அரசு..!!