சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே நிகழ்ந்த அடுத்தடுத்த விபத்துகளால் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரானது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த தொடர் விபத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தோல் கழிவுகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கிச் சென்ற லாரி ஒன்று, அதிகாலை வேளையில் அஜிஸ்நகர் மேம்பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் ‘ஸ்டேரிங்’ (Steering) கட் ஆனதால், ஓட்டுநர் சேகரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி மேம்பாலத்தின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரி கவிழ்ந்து கிடந்த அதே நேரத்தில், சென்னையில் இருந்து திருச்சி மற்றும் மதுரை நோக்கிச் சென்ற மூன்று தனியார் ஆம்னி பேருந்துகள், கும்மிருட்டில் கவிழ்ந்து கிடந்த லாரி மற்றும் ஒன்றன் பின் ஒன்றாகப் பேருந்துகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த ‘செயின் ரியாக்ஷன்’ (Chain reaction) விபத்தில் மூன்று பேருந்துகளின் முன்பகுதிகளும் அப்பளம்போல் நொறுங்கிச் சேதமடைந்தன. விபத்து நடந்தவுடன் பேருந்துகளில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி வெளியேறினர். இதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: #BREAKING: விபத்துகளுக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம்!” - அண்ணாமலை கடும் சாடல்!
இந்தத் தொடர் விபத்துகளால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் எடைக்கல் காவல் நிலைய போலீசார், கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சுமார் 3 மணி நேரத் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து மீண்டும் சீரமைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை அருகே பயங்கர விபத்து: கார் - அரசுப் பேருந்து மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி!