காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில் சென்னை குடிநீருக்கு முக்கிய ஏரியாக இருக்கக்கூடிய, செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவு அமைந்துள்ளது. இது அடையார் ஆற்றின் மூலமாகவும், சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முதன்மை ஆதாரமாகவும் இருக்கிறது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3.645 டி.எம்.சி ஆகும்.
ஏரியின் நீளம் சுமார் 11 கி.மீ. மற்றும் அகலம் 4 கி.மீ. என்பதால், இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று. அடையார் ஆற்றுடன் இணைந்துள்ள இது, மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீரை சேமிக்கிறது. கிருஷ்ணா ஆற்றிலிருந்து நீர் தாண்டி வருவதன் மூலம் சென்னையின் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இது உதவுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு... வெள்ள அபாய எச்சரிக்கை...! எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
கடந்த வருடம் இதே காலகட்டத்தில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 14.14 அடியாகவும், கொள்ளளவு 1378 மில்லியன் கன அடியாகவும் இருந்த நிலையிலும், தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகள் விரைவாக நிரம்பி வருவதினால் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு மணிக்கு ஒருமுறை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 2,170 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடி, தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.8 அடியை எட்டியுள்ளது.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தொட்டால் உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படும். இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி உள்ள மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி குன்றத்தூர், திருநீர்மலை, சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், காவனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியை நீர்வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி... நீர் திறப்பு? முக்கிய அப்டேட்..!